

முளைக்கீரை உணவுகள்:
முளைக்கீரை ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப், முளைக்கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தோசை மாவுடன் கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, மாவை சற்று கனமான ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். சுவையான சத்தான முளைக்கீரை ஊத்தப்பம் தயார்.
முளைக்கீரை மசியல்
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 4 பல், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும், உப்பு சேர்த்துக் கடையவும். பிறகு, வேகவைத்த பருப்பு, நெய் சேர்த்து மேலும் ஒருமுறை கடைந்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
முளைக்கீரை மண்டி
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - 2 கட்டு
சிறிய வெங்காயம் - 8
தேங்காய்ப் பால் - முக்கால் கப்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
முளைக்கீரையைத் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்து அதையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம்பருப்பையும் போட்டுத் தாளித்துக்கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும் முளைக்கீரையைப் போடுங்கள். நீரை ஊற்றிக் கிளறிவிட்டு வேகவிடுங்கள்.
கீரை வெந்ததும் உப்பைப் போட்டு மீண்டுமொரு முறை கிளறிவிட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடுங்கள். சுவையான முளைக்கீரை மண்டி தயார். இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
முளைக்கீரை பச்சடி
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - 1 கப்,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
கடுகு - 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
வெல்லம் - 100 கிராம்,
எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் நறுக்கிய கீரையை வேகவிட்டு நன்கு மசிக்கவும். மசித்த கீரையுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து, சிறிதளவு நேரம் கொதிக்கவிட்டு பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்த உடன், எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து இறக்கவும். அள்ளும் சுவையில் முளைக்கீரை பச்சடி தயார்.