

தயிர் சாதம் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது மோர் மிளகாயும், வடு மாங்காய் ஊறுகாயும்தான்.
வெயிலில் காய்ந்த மோர் மிளகாய் என்றாலே, சுடச்சுட தயிர் சாதத்துடன் தொட்டுக்கொள்ளும் அந்த அட்டகாசமான சுவையே அலாதிதான். சாதாரண உணவைக்கூடச் சுவைமிக்கதாக மாற்றும் இந்த மோர் மிளகாயை, கடையில் வாங்குவதைவிட வீட்டிலேயே தயாரித்தால் அதன் தரத்தையும் சுவையையும் நாமே பார்த்துக்கொள்ளலாம்.
சரியான முறையில் தயாரித்து, நன்றாக உலர்த்தி சேமித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்துப் பயன்படுத்தலாம். அந்த மோர் மிளகாயை எப்படி பதமாக வீட்டிலேயே செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மோர் மிளகாய்
தேவையான பொருட்கள்:
நீளமான பச்சை மிளகாய் – ½ கிலோ
புளித்த மோர் – 2 கப்
உப்பு – 3 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ¼ ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
மிளகாய் தேர்வு செய்வதில் கவனம்!
மோர் மிளகாய் தயாரிக்க நீளமான, சதைப்பற்றுள்ள பச்சை மிளகாயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காயங்கள், அழுகிய புள்ளிகள் இல்லாத புதிய மிளகாயாகப் பார்த்து வாங்கவும்.
மிளகாயில் ஈரப்பதம் இருந்தால், பின்னர் உலர்த்தும்போது பூஞ்சை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மிளகாயைக் காம்புடன் நன்றாகக் கழுவி, சுத்தமான துணியில் பரப்பி முழுவதுமாக நன்கு உலர்த்திக்கொள்ளவும்.
மோர் கலவை தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் புளித்த மோர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மோர் மிகவும் கெட்டியாகவும் மிகவும் தண்ணீர் கலந்தும் இல்லாமல் இருக்கக்கூடாது. மிளகாயைக் காம்புடன் நீளவாக்கில் மிளகாய் இரண்டாக வெட்டாமல் லேசாக கீறிக்கொள்ளவும்.
முழுவதுமாக இரண்டாகப் பிரிக்காமல், மோர் உள்ளே நன்றாகச் செல்லும் அளவுக்குக் கீறினால் போதும். கீறிய மிளகாய்களை மோர் கலவையில் போட்டு, அனைத்தும் நன்றாக ஊறும்படி கலக்கவும்.
ஊறவைக்கும் நேரம்
மிளகாய்களை மோர் கலவையில் குறைந்தது. இரண்டு நாட்களுக்கு மோர் நன்கு மிளகாயில் சேரும் வகையில் ஊற வைக்க வேண்டும். அந்தப் பாத்திரத்தை அடிக்கடி குலுக்கிவிடவும். பிறகு ஊறவைத்த மிளகாய்களை, மறுநாள் காலையில் உலர்த்தத் தொடங்குவது சிறந்தது.
ஊறவைக்கும் பாத்திரம் சுத்தமாகவும், உணவுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். மிளகாய்கள் முழுவதும் மோரில் மூழ்கியிருக்க வேண்டும்.
வெயிலில் உலர்த்தும் சரியான முறை
மறுநாள் காலையில், சுத்தமான வெள்ளைத் துணி அல்லது உணவுக்குப் பாதுகாப்பான உலர்த்தும் தட்டில் மிளகாய்களைத் தனித்தனியாகப் பரப்பவும். மிளகாய்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க வேண்டும்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும் நல்ல வெயிலில் உலர்த்தலாம்.
நல்ல கோடை காலங்களில் தான் இந்த மோர் மிளகாயை செய்யத் தேர்ந்தெடுப்பது மிகச் சிறந்தது. மழை அல்லது ஈரமான சூழல் உள்ள நாட்களில் உலர்த்துவதைத் தவிர்க்கவும்.
முதல் நாள் மிளகாய்கள் ஓரளவு காய்ந்ததும், மாலை நேரத்தில் வீட்டுக்குள் எடுத்துவந்து வைக்கவும்.
இரவில் வெளியில் விட்டால் பனிப்பொழிவு காரணமாக ஈரப்பதம் சேரலாம். மறுநாள் மீண்டும் வெயிலில் பரப்பவும்.
மிளகாய்கள் நன்றாகக் காயும் வரை தினமும் இதே முறையைத் தொடரவேண்டும். காய்ந்த மிளகாய் எடுத்து கைகளில் நசுக்கி பார்த்தால் பொடியின்படி இருந்தால் மிளகாய் காய்ந்து விட்டதாக எடுத்துக்கொள்ளலாம்
பொதுவாக 4 முதல் 7 நாட்கள் ஆகலாம். வெயிலின் தன்மை, மிளகாயின் அளவு, ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து நாட்கள் மாறுபடும்.
ஒரு வருடம் கெடாமல் இருக்க 5 குறிப்புகள்
1. முழுவதுமாகக் காயவேண்டும்:
மிளகாயின் உள்ளேயும் ஈரப்பதம் இல்லாமல் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும்.
2. ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்:
எடுக்கும்போது எப்போதும் சுத்தமான, உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தவும்.
3. காற்றுப்புகாத டப்பா:
மிளகாய்கள் முழுமையாகக் குளிர்ந்த பிறகு, காற்றுப்புகாத சுத்தமான கண்ணாடி அல்லது உணவுப் பாதுகாப்பான டப்பாவில் சேமிக்கவும்.
4. ஈரப்பதம் இல்லாத இடம்:
அடுப்பின் அருகில் அல்லது ஈரமான இடத்தில் வைக்காமல், குளிர்ந்த உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
5. அவ்வப்போது எடுத்து வெயிலில் உலர்த்தவும்:
பூஞ்சை, துர்நாற்றம் அல்லது ஈரப்பதம் வராமல் தடுக்க அவ்வப்போது எடுத்து வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்கவும்.
சுவையான மோர் மிளகாய் தயார்!
வெயிலில் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாயை எண்ணெயில் பொரித்து, தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம். மோரின் புளிப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்து தரும் சுவை, சாதாரண உணவையும் விருந்தாக்கிவிடும்!
ஒரு வருடம் கெடாமல் இருக்கும் என்பது சரியான உலர்த்தல், சேமிப்பு மற்றும் நாம் கையாளும் முறையில் தான் உள்ளது. எனவே ஈரப்பதமற்ற சூழலைத் தவிர்த்தால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.
பாரம்பரிய முறையில் பூஞ்சை காளான் பிடிக்காமல், ஒரு வருடம் வரை மொறுமொறுப்பு மாறாமல் மோர் மிளகாயை வீட்டிலேயே தயாரித்துச் சேமிக்கலாம்.