
முருங்கைக் கீரை இரும்புச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. எலும்புகளை வலுப்படுத்தி, மலச்சிக்கலை போக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். ரத்த சோகையை எதிர்த்து போராடக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இதில் விட்டமின் ஏ, சி, இ மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. சத்தான, சுவையான சட்னி சாப்பிட விரும்புபவர்கள் இதனை செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை 2 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
வேர்க்கடலை 1 கைப்பிடி
தனியா 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகாய் 6
உப்பு தேவையானது
புளி சின்ன எலுமிச்சையளவு
சின்ன வெங்காயம் 6
செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
வாணலியில் உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, தனியா, சீரகம் சேர்த்து, சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். வறுத்ததை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே வாணலியில் மிளகாய், புளி இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
கடைசியாக சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். இப்பொழுது முருங்கைக் கீரையை வாணலியில் போட்டு நன்கு வதக்கவும். இரண்டு நிமிடங்களில் நன்கு வதக்கியதும் எடுத்து ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, தனியா, சீரகம், மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு பொடிக்கவும். அத்துடன் வதக்கிய முருங்கைக்கீரையும் சேர்த்து அரைக்கவும். தண்ணீர் அதிகம் விடத் தேவையில்லை.
கெட்டியாக இருந்தால் தான் சாதத்தில் பிசைந்து சாப்பிடும் போது ருசியாக இருக்கும். விழுதாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். மிகவும் ருசியான முருங்கைக்கீரை துவையல் தயார்.
சூடாக வடித்த சாதத்தில் சிறிது நெய் விட்டு, முருங்கைக்கீரை துவையலை சேர்த்து பிசைந்து தயிர் பச்சடி அல்லது பொரித்த அப்பளமுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். முருங்கைக்கீரை பிடிக்காதவர்கள் கூட இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.