

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல்நலத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகியுள்ளது. அதற்கேற்ற வகையில், சத்தானதும் எளிதில் தயாரிக்கக்கூடியதுமான உணவுகளை தேர்வு செய்வது முக்கியம். அந்த வகையில், பாரம்பரியமும் ஆரோக்கியமும் இணைந்த ஒரு சிறந்த உணவுப் பொருளாக மக்கானா விளங்குகிறது.
மக்கானா என்பது தாமரை மலரின் விதைகளாகும். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரி கொண்ட இந்த உணவு உடல் எடையை கட்டுப்படுத்தவும், இரத்தச் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
மேலும், இதய நலனுக்கும் எலும்பு வலிமைக்கும் மக்கானா மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். வறுத்து ஸ்நாக்ஸாகவும், கறி, பாயசம் போன்ற பல்வேறு உணவுகளிலும் மக்கானாவை பயன்படுத்தலாம்.
சத்தான மக்கானாவை கொண்டு சுலபமாகவும் சுவையாகவும் தயாரிக்கக்கூடிய சில ரெசிபிகளை பார்க்கலாம். காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட ஏற்ற சுவையான ஆரோக்கியமான டிபன்.
மொறு மொறு மக்கானா சோள ரொட்டி
தேவையான பொருட்கள்:
மக்கானா – 1 கப்
சோள மாவு – 1 கப்
கோதுமை மாவு – ½ கப்
துருவிய கேரட் – 1 கப்
துருவிய பீட்ரூட் – ½ கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு / வேர்க்கடலை ½ கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி, அதில் மக்கானாவை சேர்த்து நன்கு வறுக்கவும். வறுத்த மக்கானாவை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மக்கானா, சோள மாவு, கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் காய்கறிகள், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.
பிறகு மிளகாய் தூள், சீரகம், உடைத்த முந்திரி பருப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்தில் பிசையவும். இந்த மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, மாவை சிறிது எடுத்து மெல்லிய ரொட்டியாக தட்டவும். சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பி சுட்டு எடுத்தால் மொறு மொறு மக்கானா சோள ரொட்டி தயார்.
மக்கானா ஸ்வீட் பால்ஸ்
மக்கானாவின் சத்தும் பால் மணமும் கலந்து சுவையான குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு.
தேவையான பொருட்கள்:
மக்கானா – 2 கப்
வேர்க்கடலை 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை/ தேன் – ½ கப்
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்
உடைத்த முந்திரி பாதாம் பருப்பு உலர் திராட்சை – 1 கப்
பால் – ¼ கப்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி, மிதமான தீயில் மக்கானாவை சேர்த்து மொறு மொறுப்பாக வறுக்கவும். அதே வாணலியில் வேர்கடலையையும் வறுத்து எடுக்கவும்
வறுத்த மக்கானாவையும் வேர்க்கடலையையும் ஆற வைத்து பொடித்து வைக்கவும். அதே வாணலியில் முந்திரி, பாதாம், உலர் திராட்சையை சிறிது வறுக்கவும்.
கடாயில் நாட்டுச்சர்க்கரையை போட்டு கரைந்ததும் வேர்கடலையை போட்டு கிளறி மக்கானா பொடியையும் வறுத்த முந்திரி பாதாம் திராட்சையை சேர்க்கவும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி., அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் சூடாக இருக்கும்போதே தேவையான அளவு பால் தெளித்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
குறிப்பு:
மக்கானாவை அதிக நேரம் வறுக்காமல், மிதமான தீயில் மட்டும் சுட்டால், அது மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.