
நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது நமக்கு தெரியும். அதை எத்தனையோ வழிகளில் நாம் உணவாக உட்கொள்கிறோம். ஆனால் நெல்லிக்காய் பயன்படுத்தி சட்னி செய்து நீங்கள் எப்போதாவது சாப்பிட்டதுண்டா? நெல்லிக்காய் சட்னி செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும் அதன் அடிப்படை செயல்முறை ஒன்றுதான். சரி வாருங்கள் இந்தப் பதிவில் முற்றிலும் ஆரோக்கியமான நெல்லிக்காய் சட்னி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
நெல்லிக்காய் - 250 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3-4
வெங்காயம் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கருமிளகு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி அதில் உள்ள கொட்டைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு கடுகு சீரகம், பெருங்காயம் கருமிளகு சேர்த்து தாளிக்கவும்.
அடுத்ததாக வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கங்கள். இது வதங்கியதும் நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் அந்தக் கலவை மொத்தத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை மீண்டும் கடாயில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லித் தழை தூவினால் அட்டகாசமான நெல்லிக்காய் சட்னி தயார். இதன் சுவை உண்மையிலேயே நன்றாக இருக்கும்.
சராசரி சட்னி வகைகளை விட நெல்லிக்காய் சட்னி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சட்னி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானம் மேம்படும், ரத்தத்தை சுத்திகரிக்கும், கண்பார்வை தெளிவாகும், சரும ஆரோக்கியம் சிறப்பாகும்.
எனவே, இந்த அற்புதமான நெல்லிக்காய் சட்னியை மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, இன்றே முயற்சித்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.