

இமயமலையோரப் பகுதியிலுள்ள ஊர்களில் வாழும் மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் நேபாளி ச்சுற்பி நாலு வகை வித்யாசமான சுவையை வெளிப் படுத்துவதாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
நேபாளி ச்சுற்பி என்பது ஒரு கடினமான, உலர் தன்மை கொண்ட சீஸ். பலவிதமான வடிவங்களில் கிடைக்கும் இந்த சீஸ் பல வகையான உணவுகளுக்கு வெவ்வேறு விதமான சுவையைக் கொடுக்கக்கூடியது. இல்லத் தரசிகளும் சமையல் கலைஞர்களும் தங்கள் சமையலின் தரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்ல சரியான சந்தர்ப்பங்களை வாரி வழங்க வல்லது இந்த ச்சுற்பி.
இந்த அபூர்வ வகை சீஸின் பூர்வீகம் கிழக்கு இமயமலைப் பகுதியில் உள்ள சிக்கிம், டார்ஜிலிங், மக்லியோட்கன்ச் (McLeodganj) மற்றும் பக்கத்து நாடுகளான நேபாள் & பூட்டான் ஆகும்.
இந்த வகை மலைச் சீஸானது சவுரி (Chauri) வகைப் பசுக்களிலிருந்து பெறப்படும் பாலிலிருந்து தயாரிக்கப் படுகிறது. சவுரி இனப் பசு, யாக் (Yak) இனத்து ஆண் மற்றும் சாதாரண வகைப் பெண் பசு ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கிய கலப்பினப் பசுவாகும். இதனாலேயே சவுரி இனப் பசுவிலிருந்து கறக்கப்படும் பால் தனித்துவமான சுவை கொண்டதாக உள்ளது.
மேலும், சவுரி உட்கொள்ளும் புல் மற்றும் தனித்துவம் கொண்ட மூலிகைச் செடிகளும் இதன் பாலுக்கு சிறப்பான டெக்ச்சரும் உயர் தர சுவையும் கிடைக்க உதவி புரிகின்றன. ச்சுற்பியின் சுவை வெவ்வேறு விதமாக சிறப்புற்று அமைவதற்கு அவை தயாரிக்கப்படும் வழி முறைகளும் ஒரு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.
நேபாளி ச்சுற்பியின் நான்கு வகைகள்:
1. மிருதுவான ச்சுற்பி: அடர் வாசனையும் புளிப்பு சுவையும் கொண்டது இந்த மிருதுத்தன்மையுடைய சீஸ்.
இறுக்கமில்லாத, சணல் நூலால் பின்னப்பட்ட பையில் வைத்து, அகலமான இலைகள் அல்லது பிளாஸ்டிக் ஷீட்களில் சுற்றப்பட்டு சந்தைக்கு வருகிறது இந்த வகை சீஸ். நேபாளிகள் ஊறுகாய் மற்றும் டம்ப்ளிங் தயாரிப்புகளில் இதை பயன்படுத்துவது உண்டு. உள்ளூர்வாசிகள் நிங்ரோ (Ningro) போன்ற உண்ணக்கூடிய பெரணி (Fern) இலைகளுடன் இந்த சீஸை சேர்த்து உட்கொள்வதுண்டு.
2. கடினத்தன்மை கொண்ட ச்சுற்பி: வெண்மை மற்றும் பிரவுன் நிறம் கொண்டிருக்கும் சீஸ் இது. பொதுவாக வெள்ளை நிறமான சீஸ் இனிப்பு சுவையும் பிரவுன் நிறம் உடையது சுவையற்றும் இருக்கும். பிரவுன் நிறம் உடையதை துண்டாக்கினால் அது வெள்ளை நிறமாக மாறும். அதன் உள்ளிருந்து சொர சொரப்பான டெக்ச்சரில் பால் கசிவதையும் பார்க்க முடியும்.
3. ஸ்மோக்ட் ச்சுற்பி: இமயமலைப் பகுதிகளில் தயாரிக்கப்படும் அதிக சுவையுடைய சீஸ் வகைகளில் இதுவும் ஒன்று. இந்த வகை சீஸ்கள் ஆழமாக புகைப்பதனஞ் செய்யப்பட்டு (Smoked) சிறந்த மணமும்
ஸ்மோக்கி ஃபிளேவரும் பெறுகின்றன. அவற்றில் இயற்கையிலேயே சேர்க்கப்பட்டுள்ள உப்பு சுவை, இதனால் சமநிலைப் படுத்தப்பட்டுவிடுகின்றன.
4. ஸ்பைஸ்ட் ச்சுற்பி: இது மண் சார்ந்த ருசி மற்றும் உமாமி (Umami) சுவை கொண்டது. சீஸுடன் நறுமணம் மிக்க ரோஸ் மேரி அல்லது தைமே (Thyme) போன்ற மூலிகை சேர்த்து தனித்துவம் மிக்க சுவையுடன் தயாரிக்கப் படுகிறது ஸ்பைஸ்ட் ச்சுற்பி. இதனுடன் காரசாரமான மிளகாயும் சேர்த்து செய்யும்போது நாவில் சுறுசுறு வென்று லேசாக எரிவது போன்ற உணர்வும் உண்டாகும்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போது நீங்களும் இந்த நேபாளி ச்சுற்பியை வாங்கி பயன்படுத்திப் பாருங்களேன்.