
இட்லிகள் தேவைக்கு அதிகமாக மீந்து போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலையே வேண்டாம். இதுபோல் செய்து கொடுங்கள். இது என்ன புது டிஷ் என்று கேட்பார்கள் வீட்டில்.
கைமா இட்லி
தேவை:
இட்லி- 8
பெரிய வெங்காயம் -2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி - கால் கப்
குடைமிளகாய் - 1
கருவேப்பிலை- சிறிது
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
இட்லிகளை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய இட்லி துண்டுகளை பொன் நிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் , கருவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கி நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு பின் இறக்கி எலுமிச்சைச்சாறு மேலாக பிழிந்து கொத்தமல்லி தழை தூவினால் கலக்கலான கைமா இட்லி ருசிக்கத் தயார்.
சில்லி இட்லி
தேவை:
இட்லிகள் - 8
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் -தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு
செய்முறை:
இட்லிகளை சதுர துண்டுகளாக நறுக்கி அதில் கடலை மாவு ,அரிசி மாவு, மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து பிசறிவிட்டு நறுக்கிய கருவேப்பிலையை தூவி லேசாக நீர் தெளித்து நன்கு கலந்து விடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் மிதமான தீயில் இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தேவைப்பட்டால் மேலே மிளகுத்தூள் தூவி பரிமாறினால் மீந்த இட்லிகள் இன்னும் வேண்டும் என்று கேட்கத் தூண்டும். இந்த சில்லி இட்லிக்கு தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
இட்லி உப்புமா
தேவை:
இட்லிகள்- 6
சீரகம்- ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்து கடலைப்பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
முந்திரி - 6
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய்- 2
நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பிலை - தேவைக்கு உப்பு - சிறிது
செய்முறை:
இட்லிகளை நன்றாக உதிர்த்து விடவேண்டும். ஒரு அடிகனமான வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, நறுக்கிய முந்திரி போட்டு சிவந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீண்டும் கிளறி உதிர்த்து வைத்துள்ள இட்லிகளை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறி மேலே கொத்தமல்லித் தழை தூவினால் இட்லி உப்புமா ரெடி.