

முட்டைக் கோஸ் - உருளைக்கிழங்கு கிரீமி சூப்:
தேவையான பொருட்கள்:
1.ஆலிவ் ஆயில் ¼ கப்
2.பச்சை நிற முட்டைக் கோஸ் நறுக்கியது 3 கப்
3.நறுக்கிய வெங்காயம் 1 கப்
4. தோல் சீவி நறுக்கிய உருளை கிழங்கு ½ கிலோ
5.நறுக்கிய கேரட் துண்டுகள் ¾ கப்
6.வெஜிடபிள் புரோத் 4 கப்
7.கல் உப்பு 2 டீஸ்பூன்
8.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
9.நறுக்கிய வெந்தய கீரை இலைகள் ½ டேபிள் ஸ்பூன்
10.புளித்த கிரீம் (sour cream) ⅓ கப்
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். மீடியம் தீயில் சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும். அதில் வெங்காயம் மற்றும் முட்டைக் கோஸ் சேர்த்து, 8-10 நிமிடங்கள் வதக்கவும். காய் நன்கு வதங்கி, லேசான பிரவுன் கலர் வரும்போது அதனுடன் உருளைக் கிழங்கு, கேரட், வெஜிடபிள் புரோத் மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் கொதித்துக் கொண்டிருக்கவிடவும். அவ்வப்போது தொடர்ந்து கிளறிவிடவும். கேரட் மற்றும் உருளைக் கிழங்கு நன்கு வெந்துவிட்டதை நசுக்கிப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பின் பாத்திரத்தை இறக்கி கீழே வைத்து விட்டு மேலும் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து விடவும். பின் கிரீம் சேர்த்து மென்மையாக கலக்கவும். வெந்தய கீரை இலைகளை மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும். நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கியமான சூப் தயார்.
கோவைக்காய் கிரேவி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.ஃ பிரஷ் கோவைக்காய் 250 கிராம்
2.சமையல் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
3.நறுக்கிய வெங்காயம் ½ கப்
4.பெருஞ்சீரகம் 3 டீஸ்பூன்
5.கறிவேப்பிலை 2 இணுக்கு
6.நறுக்கிய தக்காளி 2
7.உப்பு தேவையான அளவு
8.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
9.மிளகாய் தூள் 1½ டீஸ்பூன்
10.தனியா தூள் 2 டீஸ்பூன்
11.தண்ணீர் தேவையான அளவு
12.தேங்காய் துருவல் ⅓ கப்
13.கொத்தமல்லி இலைகள் 30
செய்முறை:
கோவைக்காயை நன்கு கழுவி, நீளவாக்கில் இரண்டிரண்டாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய் துருவலுடன் இரண்டு டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து மசிய அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முக்கால் டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கோவைக் காயைப்போட்டு நன்கு சிவந்து, சுருங்கி வரும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒண்ணேகால் டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்க்கவும்.
அது சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து கலந்து, தேவையான உப்பு போடவும். தக்காளி வெந்து மிருதுவானதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மீடியம் தீயில் கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை போனதும் வதக்கி வைத்துள்ள கோவைக்காயை அதனுடன் சேர்த்து கலந்துவிடவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி கிரேவி பதம் கொண்டு வரவும். பின் தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து 2-3 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். மல்லி இலை தூவி, சூடான சாதத்துடன் மணக்க மணக்க பிசைந்து உண்ணவும்.