
பர்பி, என்பது மிகவும் சுவையாகவும், தனித்துவமான இனிப்பாகவும் இருக்கும். இது கறுப்பு அல்லது வெள்ளை திராட்சையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகையாகும்.
திராட்சை பர்பி
தேவையானவை:
திராட்சை – 2 கப் (மிக்சியில் அரைத்து சாறு வடிக்காமல் பியூரி)
சர்க்கரை – ¾ கப்
நெய் – 2-3 மேசைக்கரண்டி
மைதா அல்லது பால் மாவு – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி
முந்திரி/பாதாம் – 5-6 (வதக்கியது)
செய்முறை: திராட்சைகளை நன்கு கழுவி, மிக்சியில் அரைத்து பியூரியாக ஆக்கவும். சாறு வடிக்க தேவையில்லை. ஒரு கனமான பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதில் பால் மாவு அல்லது மைதா சேர்த்து பொன்னிறமாக நன்றாக வதக்கி திராட்சை பியூரி சேர்த்து கிளறவும். பியூரி கொதித்து வரும் வேளையில் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து, சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். ஏலக்காய்பொடியும் சேர்த்து கலந்து விடவும். கலவை கெட்டியாகி வந்தவுடன், நெய் தடவிய தட்டில் ஊற்றி, மேலே முந்திரி, பாதாம் தூவவும். தட்டு குளிரும் வரை விட்டு, பின்னர் துண்டுகளாக வெட்டவும். திராட்சையில் தண்ணீர் அதிகமாக இருப்பதால், கெட்டியாகும் வரை அதிக நேரம் கிளற வேண்டியிருக்கும்.
சிறிது கார்ன் ஃபுளோர் சேர்த்தால் நல்ல கெட்டியாக கிடைக்கும். இந்த இனிப்பு சுவையாகவும், வித்தியாச மாகவும் இருக்கும்.
சுவையான, எளிமையான திராட்சை சாலட்
தேவையானவை:
திராட்சை (வெள்ளை / கறுப்பு அல்லது இரண்டும் கலந்து) – 2 கப் (நன்கு கழுவி நடுத்தர அளவில் துண்டாக்கவும்)
கெட்டிதயிர் – ½ கப்
மேயோனேஸ் – ¼ கப் (மசித்தது)
தேன் – 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்பொடி – சிறிதளவு
வால்நட், பாதாம், முந்திரி – 2 மேசைக்கரண்டி (வறுத்து நறுக்கியது)
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், மேயோனேஸ், தேன், ஏலக்காய் பொடி மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். துண்டாக்கிய திராட்சைகளை அந்த கலவையில் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். மேலே வறுத்த வால்நட், பாதாம், அல்லது முந்திரி தூவி அலங்கரிக்கவும். சாலட்டை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்த பிறகு பரிமாறுவது சிறந்த சுவையை தரும்.
இரு திராட்சைகளை கலந்து பயன்படுத்தினால் சாலட் அழகாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். இது ஒரு இனிப்பான, குளிர்ந்த சாலட் ஆகும்.
திராட்சை ஜாம்
தேவையானவை:
திராட்சை – 2 கப் (கறுப்பு அல்லது வெள்ளை)
சர்க்கரை – 1 கப்
எலுமிச்சைசாறு –1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: திராட்சையை நன்கு கழுவி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் வடித்த பியூரியை மட்டும் பயன்படுத்தலாம். ஒரு கனமான பாத்திரத்தில் திராட்சை பியூரியை ஊற்றி நடுத்தர தீயில் போட்டு கிளறவும். சற்று கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கிளறி, பாகு வடிவத்தில் கெட்டியாகும் வரை தொடர்ந்து அடி பிடிக்காமல் கவனமாக கிளறவேண்டும். கெட்டியானதும், எலுமிச்சைசாறு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி, அடுத்து தீயில் இருந்து இறக்கவும். ஜாம் சூடான நிலையில் தட்டில் ஊற்றி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் சேர்த்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
கெட்டியாக வந்துள்ளதா என தெரிந்துகொள்ள, ஒரு தட்டில் சிறிது ஜாம் ஊற்றி விரலால் தேய்த்துப் பாருங்கள். ஜாம் சேராமல் இருந்தால் அது தயார். Bread, Chappathi, Poori-க்கு இது ஒரு அருமையான துணை.