சமையல் டிப்ஸ்: சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளுக்கு!
வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை சமைக்கும்போது தேங்காய் எண்ணையில் தாளித்துப் பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்கும் பொருளின்றி நான்ஸ்டிக் பான் அடுப்பில் இருக்கக்கூடாது.
எந்தக் கீரையானாலும் அதை அரிசி களைந்த நீரில் ஊறவைத்து,
பிறகு சமையல் செய்து சாப்பிட்டால், கீரை நிறம் மாறாமல் பசுமையாக இருக்கும்.
புடலங்காயின் விதைகளை பாழாக்காதீர்கள். அதை வதக்கி, உளுத்தம் பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து, புளி, உப்பு சேர்த்து சுவையான துவையல் தயார் செய்யலாம்.
கிழங்கு வகைகளை சீக்கிரம் வேகவைக்க வேண்டுமானால், அவற்றை பத்து நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பிறகு வேகவையுங்கள். சீக்கிரம் வெந்துவிடும்.
வடை, பஜ்ஜி, போன்றவற்றை எண்ணையில் பொரித்து எடுக்கும்போது நான்கு துளி எலுமிச்சைப் பழச்சாற்றை சேருங்கள். எண்ணெய் குறைந்த அளவே செலவாகும்.
ஒவ்வொரு முறை தோசை சுடும்போதும் தோசைக்கல்லின் மீது கட் செய்த உருளைக்கிழங்கினால் நன்கு தேயுங்கள். பிறகு சுவையுங்கள் மொறு மொறு தோசையை. முற்றின தேங்காயை பல்லுப்பல்லாக நறுக்கி நெய்யில் சிவக்க
வறுத்து முந்திரி பருப்புக்கு பதிலாக பாயசத்தில் சேர்த்துப் பாருங்கள். பாயசம் சுவையோ சுவை.
கூட்டு, குழம்பு போன்றவை செய்யும்போது சற்றே நீர்த்துவிட்டால், பொட்டுக் கடலை மாவைக் கரைத்துவிட்டால் போதும். கெட்டியும் ஆகும், சுவையும் கூடும்.
காரஅடை செய்யும்போது, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆகியவற்றை கலந்து வைத்துக்கொண்டு அடை சுட்டால், வித்தியாசமாக இருப்பதுடன் அனைத்து எண்ணெய்களின் சத்தும் கிடைக்கும்.
கத்தரிக்காய் சமைக்கும்போது நிறம் மாறி விடுகிறதா? கவலை வேண்டாம். கத்தரிக்காய் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், நிறம் மாறாமல் இருப்பதோடு சுவையும் அதிகரிக்கும்.
வெங்காய சாம்பார் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைத்தால் சாம்பார் மணம் ஊரைத்தூக்கும்.