

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலை நேர பரபரப்பில் தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தைத் தவிர்க்க, வாரத்தின் ஐந்து நாட்களுக்கு தேவையான எளிய ஆனால் ஆரோக்கியமான, புரதச்சத்து நிறைந்த பயறு வகை ரெசிபீஸ்.
திங்கள் – பாசிப்பயறு புலாவ்/கேரட் பச்சடி
8 மணி நேரம் ஊறவைத்த பாசிப்பயறு – 1 கப் + அரிசி – 2 கப்
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து பொரிந்ததும், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி–பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதித்ததும், ஊறவைத்த அரிசி–பருப்பை சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
கேரட் பச்சடி
தயிரில் துருவிய கேரட்டை கலந்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து புலாவுடன் பரிமாறவும்.
செவ்வாய் – பீட்ரூட் சாதம் & கொண்டைக்கடலைக் கறி
பீட்ரூட்டை சீவி, அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து சாறு பிழிந்து எடுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, முந்திரிப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி–பூண்டு விழுது, புதினா சேர்த்து வதங்கியதும் பீட்ரூட் சாறை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
கொண்டைக்கடலைக் கறி
ஊறவைத்த கொண்டைக்கடலையை வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் தேங்காய் துருவல், வரமிளகாய், கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து அரைத்த விழுதை போட்டு கிளறி இறக்கவும்.
புதன் – தட்டைப் பயறு சாதம் / உருளைக்கிழங்கு ஃபிரை
குக்கரில் வெங்காயம், தக்காளி தாளித்து,ஒரு துண்டு இஞ்சி + கசகச + சோம்பு + பூண்டு + வரமிளகாய் + கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதை போட்டு, ஊறவைத்த தட்டைப் பயறு + அரிசியுடன் உப்பு சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
உருளைக்கிழங்கு ஃபிரை
உருளைக்கிழங்கை தோல் சீவி, லேசாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு எடுத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும் போட்டு கிரிஸ்பியாக பொரித்து, மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
வியாழன் – கொள்ளு சாதம் / சோயா கறி
கொள்ளுப் பருப்பை வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி உடைத்துக் கொள்ளவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். கொள்ளு – 1 கப் + அரிசி – 2 கப்
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு சேர்த்து பொரிந்ததும், உடைத்த கொள்ளை சேர்த்து பொரித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி–பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதித்ததும், ஊறவைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சோயா கறி
சோயாவை சுடு தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, தேங்காய் எண்ணெயில் பெரிய வெங்காயத்துடன் வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
வெள்ளி – கொண்டைக்கடலை பிரியாணி & கேரட்–பீட்ரூட் சட்னி
ஊறவைத்த கொண்டைக்கடலை – 1 கப் + அரிசி – 2 கப் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து பொரிந்ததும், இஞ்சி–பூண்டு விழுது, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொதித்ததும், ஊறவைத்த அரிசி–கடலையை சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
கேரட்–பீட்ரூட் சட்னி
கேரட், பீட்ரூட், பூண்டு, வரமிளகாய், உப்பு புளி சேர்த்து வதக்கி அரைத்துக் தாளிக்கவும்.