Nutritious varieties of Vadagam
Vadagam recipes

உணவுக்கு ருசி தரும் சத்தான வத்தல் வகைகள்..!

Published on

வெயில் துவங்கிவிட்டது. உணவுக்கு ருசி தரும் எளிதாக செய்யக்கூடிய அதே சமயம் சத்தான வத்தல், வடகம் ரெசிபிகளை இங்கு காணலாம்.

ரோஜா பூ வடகம்

தேவை
:
பன்னீர் ரோஜா இதழ்கள் - 2 கப்
ஜவ்வரிசி-  2 கப்
பச்சைமிளகாய் - ஆறு
எலுமிச்சை சாறு - அரை மூடி
உப்பு – தேவைக்கு

செய்முறை:
ஜவ்வரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊறவிடவும். ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அதனுடன் மிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் ஆறு கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊறிய ஜவ்வரிசியைப் போட்டு வேகவைத்து இதில் அரைத்த விழுது எலுமிச்சைசாறு கலந்து ஆறியதும் கரண்டியால் எடுத்து வட்டமாக ஊற்றி நன்றாக காயவிட்டு எடுத்து டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

பாகல் வடகம்

தேவை:

துவரம் பருப்பு - ஒரு கப்
பாகற்காய் - 4
பச்சை மிளகாய்-  20
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:
துவரம் பருப்பை ஊறவைத்து அத்துடன் பச்சை மிளகாய், ஜீரகம், உப்பு சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும் பாகற்காயின் விதைகளை நீக்கி பொடிப்பொடியாக நறுக்கவும். அரைத்த துவரம் பருப்பு கலவையில் பாகற்காய் துண்டுகளை போட்டுக் கலந்து சிறிய வடைகளாக தட்டி வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து தேவைப்படும்போது  எண்ணையில் போட்டு பொரித்து தந்தால் தயிர் சாதத்திற்கு செம டேஸ்டாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மால் புவா - பலாக் காய் சப்ஜி ரெசிபி..!
Nutritious varieties of Vadagam

நெல்லிக்காய் வடகம்

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்- 20
பச்சை மிளகாய் - 10
கொத்தமல்லித்தழை-1 கைப்பிடி  பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொட்டை நீக்கி சுத்தம் செய்த பெரிய நெல்லிக்காயுடன் உப்பு மிளகாய் சேர்த்து அரைத்து இதில் நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெருங்காயம் போட்டு கலந்து சிறிய வடைகளாக தட்டி காயவைத்து எடுத்து வைக்கவும்.


பிரண்டை வத்தல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரை கிலோ
ஜவ்வரிசி - ஒரு சிறிய கப்
சுத்தம் செய்த பிரண்டை - ஒரு கப்
பச்சை மிளகாய்-  10
உப்பு – தேவைக்கு

செய்முறை: 
அரிசியை ஊறவைத்து அரைத்து மூடிவைத்து இரு தினங்கள் புளிக்க விடவும். பிரண்டையுடன் மிளகாய் சேர்த்து அரைக்கவும்.ஏழு அல்லது எட்டு டம்ளர் சூடான நீரில்  ஜவ்வரிசியை போட்டு பாதி வெந்த பின் அரைத்த பிரண்டை தேவையான உப்பு  சேர்த்து கொதிக்கவிட்டு ஆறியதும் அச்சில் போட்டு பிழிந்து நன்றாக காயவைத்து எடுத்து வைக்கவும்.

கோவக்காய் வத்தல்

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கோவக்காய் - கால் கிலோ
புளித்த தயிர்- ஒரு கப்
பச்சை மிளகாய் -15
உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சப்புக்கொட்ட வைக்கும் நவீன கேப்சிகம் கப், சைனீஸ் நூடுல்ஸ்..!
Nutritious varieties of Vadagam

செய்முறை:
சுத்தம் செய்த கோவக்காய்களை நீளவாக்கில் நறுக்கி கொதிக்கும் நேரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வடிகட்டி எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் அரைத்து புளித்த தயிரில் கலக்கவும். இதில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற விட்டு எடுத்து வெயிலில்  காயவிட்டு எடுத்து வைக்கவும்.

பூசணிக்காய் வத்தல்

தேவை:

துருவிய வெள்ளை பூசணிக்காய்- ஒரு கப் உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஐந்து அல்லது ஆறு பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஊறவைத்த உளுத்தம் பருப்புடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து துருவிய பூசணிக்காயை நீரைப் பிழிந்து அதில் சேர்த்து பெருங்காயம் போட்டு நன்கு  கலந்து வெயிலில் கிள்ளி வைத்து காயவிட்டு எடுக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com