
கோதுமை மாவு டயமண்ட் சிப்ஸ் (Nutritious wheat flour recipes)
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
சோள மாவு (Corn Flour) – 1/4 கப்
ஓமம் – 1 ஸ்பூன்
எள் – 2 ஸ்பூன்
தோல் உரித்த பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் – 10 (காரம் தேவைக்கேற்ப)
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸியில் உரித்த பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு மைய அரைத்துகொள்ளவும். எள் மற்றும் ஒமத்தை சிவக்க வறுத்து எடுக்கவும்.
கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, அதனுடன் வறுத்து வைத்துள்ள எள், பெருங்காயத்தூள் மற்றும் ஓமத்தையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் (அதிக தண்ணீர் இல்லாமல்) கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவை 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு சப்பாத்தி தேய்க்கும் பலகையில் சிறிது சோளமாவு தூவி, மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
தேய்த்த சப்பாத்தியின் மேல் சோளமாவு தூவி, அதை டயமண்ட் வடிவில் கத்தியால் வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், வெட்டிய துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான கிரிஸ்பியான கோதுமை டயமண்ட் சிப்ஸ் ரெடி!
நன்றாக ஆறவிட்டு, ஒரு air-tight கன்டெய்னரில் வைத்து குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக தரலாம்.
கோதுமை மாவு பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – 1½ கப்
முந்திரி பருப்பு – 10
ஊறவைத்து தோல் உரித்த பாதாம் பருப்பு – 10
ஏலக்காய் – 6
நெய் – 2 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் ஏலக்காய், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து எடுக்கவும். சர்க்கரையுடன் வறுத்த பருப்புகள் மற்றும் ஏலக்காயையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, மேலுள்ள சர்க்கரை கலவையை சேர்க்கவும். அதனுடன் நெய் மற்றும் தேவையான தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சப்பாத்தி உருட்டும் பலகையில் சிறிது கோதுமைமாவு அல்லது சோள மாவு தூவி, உருண்டைகளை மிதமான தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.
தேய்த்த மாவை பாட்டிலின் மூடி அல்லது சிறிய டிபன் பாக்ஸ் மூடியால் வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய பிஸ்கட் துண்டுகளை, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்.
சுவையான, ஆரோக்கியமான கோதுமை மாவு இனிப்பு பிஸ்கட் ரெடி!