
இட்லி தோசைக்கு பதிலாக தற்போது கோதுமை மாவில் ஒரு சப்பாத்தி பூரி என செய்வது பலரின் வழக்கமாகி விட்டது. சப்பாத்தி தவிர என்னை கோதுமை மாவில் இதுபோன்று செய்து அசத்துங்கள்.
கோதுமை வெஜிடபிள் இட்லி
தேவை:
கோதுமை மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கேரட் பீன்ஸ் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பு ஊறவைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சலித்த கோதுமை மாவு கலந்து உப்பு சேர்த்து இட்லிக்கு கரைப்பது போல் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். இதில் பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து இட்லிகளாக ஆவியில் வேகவைத்து எடுத்தால் சத்தான இட்லி தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி ஏற்றது.
கோதுமை மாவு நெய்யுருண்டை
தேவை:
கோதுமை மாவு - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
சூடான நெய் - 1/4 கப்
முந்திரி - 8
திராட்சை - 10
பாதாம் - 8
ஏலக்காய் – 8
செய்முறை:
அடிகனமான வாணலியில் சிறிது நெய் விட்டு கோதுமை மாவை போட்டு பச்சை வாசனை போக வறுத்து தனியாக வைக்கவும். அதே வானொலியில் மீண்டும் சிறிதளவு நெய்விட்டு திராட்சை, உடைத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றை சிவக்க வறுத்து தட்டில் கொட்டவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கோதுமைமாவு மற்றும் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும். தேவையான நெய்யை உருக்கி மாவு கலவலயில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கலந்து விருப்பமான அளவில் உருண்டைகள் பிடிக்கவும். சத்தான கோதுமை மாவு நெய்யுருண்டை தயார்.
கோதுமை ரவை இனிப்பு
தேவை:
கோதுமை ரவை - 1 ஒரு கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த் தூள்- 1 டீஸ்பூன்
பைனாப்பிள் சதுர துண்டுகளாக நறுக்கியது -1 டேபிள் ஸ்பூன்
நெய் -3 டேபிள்ஸ்பூன்
முந்திரி திராட்சை - தலா 10
கேசரிப்பவுடர் – சிட்டிகை
செய்முறை:
வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கோதுமை ரவையை நன்கு வறுத்து தனியே வைத்து அதிலேயே மேலும் சிறிது நெய் விட்டு ஒடித்த முந்திரி திராட்சையை வறுத்து எடுக்கவும். இப்போது தேவையான தண்ணீர்விட்டு கேசரி பவுடரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வறுத்த ரவையை சேர்த்து கிளறவும். சில நிமிடங்களில் ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறி கலவை கெட்டியானதும் தேவையான அளவு நெய், வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதில் அன்னாசி வாசம் வேண்டும் என்றால் நறுக்கிய பழங்கள் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்திருந்து மேலே சிறிது நெய்யூற்றி இறக்கவும்.
கோதுமை உருளை போண்டா
மேல் மாவு செய்ய
கோதுமை மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூரணம் செய்யத் தேவை உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய்-3
பெரிய வெங்காயம்-2
சீரகம்- 1/4 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது
கருவேப்பிலை கொத்தமல்லி தழை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மற்றவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பெருங்காயம் சேர்த்துக்கிளறி கொத்தமல்லித்தழை தூவி கலந்து இறக்கி உருண்டைகளாக பிடிக்கவும்.
இப்போது வாணலியில் தேவையான எண்ணெயை காயவைத்து கரைத்து வைத்துள்ள கோதுமைமாவு கலவையில் உருண்டைகளை முக்கி எடுத்துபோட்டு சிவக்க எடுத்து வைக்கவும்.