
தற்போது சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் பெருகி வருகிறது. இதில் மிகவும் சிறப்பாக எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சாமை மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது. சாமையில் பொடித்த சாமை கூட்டாஞ்சோறும் சாமை வெல்லப்பாயசமும் செய்யலாம் வாங்க…
பொடித்த சாமை கூட்டாஞ்சோறு
தேவை:
சாமை அரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 1 கப்
கேரட் ,பீன்ஸ் ,உருளைக்கிழங்கு, வாழைக்காய் - (நறுக்கியது) 1 கப்
சின்ன வெங்காயம் - 20
மாங்காய் - சிறியது 1
கத்திரிக்காய், முருங்கைக்காய் - தலா 1
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி அளவு
புளிக் கரைசல் - தேவையான அளவு
மிளகாய் தூள் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க நல்லெண்ணெய் அல்லது நெய்- 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு உப்பு - தேவைக்கு
வறுத்துப் பொடிக்க
தனியா என்ற கொத்தமல்லி விதைகள் - 1டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
செய்முறை:
தனியா உள்ளிட்ட பொருட்களை வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும்வரை சிவக்க வறுத்து அதை மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக பொடிக்கவும். சாமை மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் தேவையான தண்ணீர்விட்டு நன்கு வேகவைக்கவும். ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து அதனுடன் உரித்த சின்ன வெங்காயத்தை நறுக்காமல் அப்படியே சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் சிறிதாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி வேகவிடவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பாதி வெந்ததும் புளிக்கரைசல் உப்பு சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போனதும் வறுத்தப் பொடித்து வைத்துள்ள பொடியுடன் சிறிது நீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் புளிக்கரைசலுடன் சேர்க்கவும்.
இதனோடு வேகவைத்து எடுத்துள்ள சாமை மற்றும் துவரம்பருப்பு சேர்த்து கைப்பிடி அளவு முருங்கை கீரை நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்க்கவும். இது அனைத்தும் நன்றாக சேர்ந்து வந்ததும் கிளறி இறக்கி வைத்து பரிமாறவும் மேலாக நெய் விட்டு சூடாக சாப்பிட்டால் சுவை அள்ளும்.
சாமை வெல்லப்பாயசம்
தேவை:
சாமை - 1 கப்
வெல்லம் பொடித்தது- 1/2 கப
கெட்டியான தேங்காய்ப்பால் - 1/2 கப்
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
நெய்- தேவைக்கு
முந்திரி - 15
ஏலக்காய் -10
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
சாமையை சுத்தம் செய்து நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவி விட்டு நல்ல தண்ணீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு குக்கரில் மூன்று டம்ளர் அளவு தண்ணீர்விட்டு 4 விசில் விட்டு நன்கு வேகவிடவும். வெல்லத்தை பொடித்து வைத்துக்கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை உடைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஏலக்காய்களை தூளாக்கவும்.
வெந்த சாமையுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும், வெந்த பின்னர் தேங்காய்ப்பால் கலந்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.
சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் மணமாக இருக்கும். (விரும்பினால் ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரத்தையும் கைகளால் பொடித்துப் போடலாம்) சுவையான சாமை பாயசம் தயார். சிறு தானியத்துடன் வெல்லத்தில் உள்ள இரும்பு சத்தும் இணைந்து உடலுக்கு புத்துணர்ச்சி சக்தியைக் கொடுக்கும்.