சுவையும் ஆரோக்கியமும் இணைந்த நட்ஸ் பர்ஃபி & மணமான தேங்காய் பர்ஃபி!

healthy nuts sweets
Nuts Parfait - Coconut Parfait!
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

நட்ஸ் பர்ஃபி

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

சர்க்கரை – 2 கப் (தேவைக்கு ஏற்ப மாறுபடும்)

பால் 2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 15

திராட்சை – 15

பாதாம் பருப்பு – 15

பிஸ்தா பருப்பு 15

பேரிச்சம்பழம் 10

வெள்ளை எள் – 2 ஸ்பூன்

நெய் – ½ கப்

ரீஃபைண்ட் ஆயில் – ½ கப்

செய்முறை:

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, அதில் கடலை மாவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த மாவை ஒரு தட்டில் ஆறவிடவும்.

மீண்டும் வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை பொடித்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பிறகு அதே வாணலியில் திராட்சையை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து எடுக்கவும். வறுத்த பருப்புகளை 2 ஸ்பூன் அளவு எடுத்து தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும். அதன் பின் வெள்ளை எள்ளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

ஒரு கப்பில் ரீஃபைண்ட் ஆயிலும், நெய்யும் சேர்த்து, ஒரு ஸ்பூனால் நன்கு கலந்துவைக்கவும். அடி கனமுள்ள பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைய விடவும்.

சர்க்கரை நன்றாக கரைந்ததும், பால் சேர்த்து அழுக்கை அகற்றவும் ஒரு கம்பி பாகு வந்ததும், வறுத்த கடலை மாவை தண்ணீரில் தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு, சிறிது சிறிதாக சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

பின்னர் நெய் மற்றும் ஆயில் கலவையை சேர்த்து, மிதமான தீயில் வைத்து இடையிடையே கிளறவும். பர்ஃபி மைசூர் பாகு பதத்தில் திரண்டு வரும்போது ஏலக்காய் தூளைச் சேர்த்து கிளறவும்.

இறுதியாக, பொரித்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பை சேர்த்து பேரிச்சம்பழம்,திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, அடுப்பில் இறக்கி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
Quick and Healthy சூப் பொடி... சூடாக சூப் குடித்தால் குளிருக்கு நல்லா இருக்கும்ல..!
healthy nuts sweets

பிறகு நெய் தடவிய தட்டில் வெள்ளை எள் பொடித்த பருப்புகளை தூவி, அதன் மேல் பர்ஃபி கலவையை பரப்பி மேலே கொஞ்சம் வெள்ளை எள் தூவி ஆறவிடவும்.ஆறிய பின் துண்டுகளாக நறுக்கவும். சுவையான ஆரோக்கியமான நட்ஸ் பர்ஃபி ரெடி!

தேங்காய் பர்ஃபி

தேவையான பொருட்கள்:

முற்றிய தேங்காயை துருவியது – 2 கப்

சர்க்கரை – 3 கப் (தேவைக்கேற்ப அளவு மாறுபடும்)

ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

நெய் – 4 ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி, துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வறுக்கவும். வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

ஒரு கம்பி பாகு பதம் வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து வைக்கவும். வறுத்த தேங்காயை பாகில் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை கட்டியில்லாமல், கை விடாமல் கிளறிக்கொண்டே இருங்கள்.

இதையும் படியுங்கள்:
குழையக் குழைய சிறுதானியப் பொங்கல் செய்வது எப்படி?
healthy nuts sweets

கலவை கெட்டியாகி பொங்கி வரும்போது, அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். மேலே முந்திரி பருப்பு அல்லது பாதாம் துண்டுகளை வைத்து ஆறவிடவும். சிறிது நேரம் கழித்து, கத்தியால் தேவையான வடிவத்தில் வெட்டவும். சுவையான தேங்காய் பர்ஃபி தயார்!

logo
Kalki Online
kalkionline.com