
சீசர் சால்ட் (Caesar salt) என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை உப்பாகும். சீசர் சாலட் உணவுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் இந்த பதப்படுத்தப்பட்ட உப்பு, கடல் உப்பு, மிளகாய் தூள், பூண்டுத்தூள், வெங்காயத்தூள் மற்றும் செலரி உப்பு போன்ற மசாலா பொருட்களைக்கொண்டிருக்கும்.
இது காக்டெய்ல் பானங்களில் குறிப்பாக சீசர் காக்டெய்ல் பானங்களில் அலங்கரிக்கவும், சுவையை கூட்டவும் பயன்படுகிறது. சீசர் சாலட் போன்ற உணவுப் பொருட்களுக்கு சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
சீசர் சாலட் அதன் மிருதுவான லெட்யூஸ், மொறுமொறுப்பான க்ரூட்டன்கள் மற்றும் கிரீமி டிரெஸ்ஸிங் ஆகியவற்றின் கலவையானது சுவையை அதிகரிக்கிறது. இது உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் சாலட்களில் ஒன்றாகும்.
சீசர் சாலட் என்பது இத்தாலிய குடியேற்றவாசியான சீசர் கார்டினி என்பவரால் உருவாக்கப்பட்ட சாலட் ஆகும். இது ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர் பெயரால் உருவாக்கப்பட்டதல்ல. 1924 இல் மெக்சிகோவின் டிஜுவானாவில் உள்ள அவருடைய உணவகத்தில் இந்த சாலட்டை முதன்முதலாக உருவாக்கினார். இவர் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உணவகங்களை நடத்தி வந்தவர். அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்கு வந்து செல்ல தடை செய்யப்பட்ட காலத்தில் அமெரிக்க வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கார்டினி தன்னுடைய உணவகத்தை டிஜுவானாவில் இயக்கினார்.
சமையலறை பொருட்கள் குறைவாக இருந்த ஒரு பரபரப்பான விடுமுறை வார இறுதியில் தற்செயலாக உருவாக்கப்பட்டதுதான் இந்த சீசர் சாலட். நவீன பதிப்புகளில் கிரில் செய்யப்பட்ட சிக்கன் அல்லது வேகவைத்த முட்டைகளும் சேர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சீசரின் அசல் பதிப்பில் இவை சேர்க்கப்படவில்லை. சீசர் கார்டினி உருவாக்கிய இந்த சாலட் அவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டது. பலர் இது ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசரின் பெயரில் வந்தது என்று தவறாக எண்ணுகிறார்கள். இதற்கும் ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதில் கீரை, ரோமைன் லெட்டூஸ் இலைகள், க்ரூட்டன்கள்(வறுத்த ரொட்டி கியூப்ஸ்கள்), பர்மேசன் சீஸ், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, டிஜான் கடுகு, மிளகு, பூண்டு, வொர்செஸ்டர்ஷைர் சாஸ் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட சாலட் ஆகும்.
சாலட் இலைகள் புதியதாகவும், மொறுமொறுப்பாகவும் வைத்திருப்பதற்கு அவற்றை ஐஸ் தண்ணீரில் நனைத்து, பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு உலரவைக்கவும். கிளாசிக் சீசர் சாலட் டிரஸ்ஸிங்கில் பார்மேசன் சீஸ், முட்டை அல்லது முட்டையின் மஞ்சள் கரு மட்டும், புதிதாக அரைத்த கருப்பு மிளகு, ஆலிவ் எண்ணெய், டிஜான் கடுகு மற்றும் பூண்டுடன் கூடுதலாக மயோனைஸ் போன்ற சேர்க்கைகளும் அதனை மேலும் சுவையுள்ளதாக்கும்.
புதிய இனிப்பு சுவைக்கு ரோமைன் லெட்யூஸின் உட்புற இலைகளை சேர்ப்பதும் உண்டு. இதன் தனித்துவமான சுவை மற்ற சாலட்களில் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. உலக அளவில் பல்வேறு உணவு வகைகள் மற்றும் சுவைகளுக்கு எளிதில் பொருந்திய காரணத்தால் இந்த சாலட் விரைவில் பிரபலம் அடைந்தது. உலகின் மிகவும் பிரபலமான சாலடுகளில் இதுவும் ஒன்று. இன்று இது சாதாரண துரித உணவு கடைகள் முதல் பெரிய சொகுசு ஹோட்டல்கள் வரை எல்லா இடங்களிலும் பிரபலமானதாக உள்ளது.