பலாப்பழப் பஞ்சாமிர்த தோசை: ஓணம் ஸ்பெஷல் முருகனின் நைவேத்தியம்!

பலாப்பழம், வாழைப்பழம், தேன் கலந்த தெய்வீக சுவையுடைய பஞ்சாமிர்த தோசை செய்வது எப்படி?
பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil Dosa
பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil DosaAI Image
Updated on

“முருகா... முருகா...” என்று மனமுருகி அழைக்கும் பக்தனின் குரலுக்கு, பழனி மலை முருகன் எப்போதும் ஒரு தனி உணர்வைத் தருவார். மேற்கு திசை பார்த்து கேரளா நோக்கி முருகப்பெருமான் காட்சி தருவதாலோ என்னவோ கேரள சகோதரர்களுக்கு முருகர் மேல் அலாதிப் பிரியம்தான் எப்போதும்.

குறிப்பாக கேரள மக்களுக்கும் பழனி முருகனுக்கும் உள்ள பக்தித் தொடர்பு மிகவும் நெருக்கமானது. ஓணம் கொண்டாடும் இந்த வேளையில், முருகபக்தியையும் ஒரு சுவையான நைவேத்தியத்தையும் இணைக்கும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் என் தோழி காயத்ரி.

“சில வருடங்களுக்கு முன்பு ஒரு சஷ்டி நாள். அன்று நான் விரதம் இருந்தேன். காலை நேரத்தில் முருகனுக்கு நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும் என்று மனதில் ஆசை.

ஆனால் வீட்டில் குறிப்பிடும் அளவுக்கு தேவையான பொருட்கள் இல்லை. சில நன்றாகப் பழுத்த பலாப்பழச் சுளைகள், இரண்டு கனிந்த வாழைப்பழங்கள், கொஞ்சம் தேன், நெய் இரவு அரைத்து எடுத்துவைக்கப்பட்ட மாவு மட்டுமே இருந்தன.

‘முருகா... என்னிடம் இருப்பது இதுதான். ஆனால் உன்மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் நிறைய இருக்கிறது. இக்கனிகளை வைத்து நான் படைக்கப்போகும் அடியேனின் நெய்வேத்தியதை ஏற்றுக்கொள்வாய் ’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

பலாப்பழத்தையும் வாழைப்பழத்தையும் நன்றாக மசித்து அதனுடன் தேன், நெய், பேரிச்சம்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பஞ்சாமிர்தம் போலக் கலந்துகொண்டேன்.

பிறகு தோசைக்கல்லில் ஒரு தோசை வார்த்து, அதன் மேல் அந்தப் பழக் கலவையைத் தடவி, சிறிது நேரம் மிதமான தீயில் வேகவைத்தேன். அதில் கலந்திருந்த நெய் உருகி, பலாப்பழமும் ஏலக்காயும் கலந்த மணம் கமகமவென்று வீசியதும், மணமனக்கும் தோசையை அப்படியே ஒரு தாம்பூலத் தட்டில் வைத்து முருகனுக்குப் படைத்தேன்.

விளக்கேற்றி, கண்களை மூடி மனமுருகி ‘முருகா...’ என்று வேண்டிக்கொண்டிருந்தேன்.

பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil Dosa
பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil DosaAI Image

அப்போது திடீரென்று வெளியிலிருந்து மயில் அகவும் சத்தம் கேட்டது.

நான் உடனே வாசலுக்கு ஓடிப்போய்ப் பார்த்தேன். அங்கே ஒரு மயில் நின்றுகொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ஒரு வாழை இலையில் பிரசாதத்தை சிறிது வைத்து மயிலுக்கு படைத்தேன்.

‘முருகா... உன் வாகனத்தை அனுப்பி என்னைத் தேற்றுகிறாயா?’ என்று மனம் உருகினேன்.

அடுத்த சில நிமிடங்களில் பக்கத்து வீட்டுக் குழந்தை சரவணன் ஓடிவந்து காயத்ரி என்று புன்னகைத்தபடி வீட்டிற்குள் வந்தான். அந்தக் குழந்தையைப் பார்த்ததும், முருகனின் பாலக வடிவம் நினைவுக்கு வந்தது. நான் அன்புடன் அந்தக் குழந்தைக்கும் பிரசாதத்தைப் பரிமாறினேன். குழந்தை பிரசாதத்தை ருசித்து தன் எச்சில் வழிந்ததோட சிரித்துக்கொண்டே சாப்பிட்ட அழகு... அடடா என்ன அழகு ...முருகா!

அந்த நிகழ்வு உண்மையில் முருகனின் அருளா, அல்லது என் பக்தியில் நான் கண்ட ஒரு அழகான தருணமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாளிலிருந்து முருகன் என்னுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை மட்டும் என் மனதில் இன்னும் ஆழமாகிவிட்டது.

பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil Dosa
பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil DosaAI Image

அன்று முதல் முருகனுக்குப் படைக்கும் நைவேத்தியங்களில் இந்தப் பலாப்பழப் பஞ்சாமிர்த தோசைக்கும் ஒரு தனி இடம் கொடுத்துவிட்டேன்,” என்று காயத்ரி சொல்லி முடித்தபோது, அவளுடைய கண்களிலும் பக்தியின் ஈரம் தெரிந்தது.

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – தேவையான அளவு

மஞ்சள் நிற நன்கு பழுத்த பலாப்பழச் சுளைகள் – 8 முதல் 10

கனிந்த நேந்திரம் வாழைப்பழம் – 2

நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் – ½ கப்

தேன் – 2 டேபிள்ஸ்பூன்

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

பேரிச்சம்பழம் – 4

ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன்

பச்சைக்கற்பூரம் - கடுகளவு எடுத்து பொடித்தது (edible camphor)

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பலாப்பழச் சுளைகள், பேரிச்சம்பழம், வெல்லம், ஏலக்காய்த்தூள், தேன், நெய், கடுகளவு பச்சைகற்பூரம் பொடித்து சேர்த்து நன்றாக பிசைந்து மசித்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

பின்னர் தோசைக்கல்லைச் சூடாக்கி, தோசை மாவை ஊற்றி மென்மையான தோசையாக வார்க்கவும். தோசை வெந்து வரும்போது தீயைக் குறைத்து, தயாரித்த பஞ்சாமிர்தக் கலவையை அதன் மேல் சமமாகத் தடவவும்.

நெய்யும் தேனும் கலந்த பழக்கலவை தோசையின் சூட்டில் லேசாக உருகி மணம் வீசத் தொடங்கும். ஒரு நிமிடம் கழித்து தோசையை மடித்து எடுத்தால், பலாப்பழ வாசனை தூக்கும், நெய் மணக்கும், இனிப்பான பலாப்பழப் பஞ்சாமிர்த தோசை தயார்!

பழனி பஞ்சாமிர்தம், திருச்செந்தூர் பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்கள் வீட்டில் கொஞ்சம் மிஞ்சிவிட்டால், அதை வீணாக்காமல் இந்தப் பஞ்சாமிர்த தோசை செய்யப் பயன்படுத்தலாம். குறிப்பாக மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு, சுடச்சுட இந்தத் தோசையைச் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். பஞ்சாமிர்தத்தின் இனிப்பும், நெய்யின் மணமும், தோசையின் சுவையும் சேர்ந்து குழந்தைகளுக்கு மறக்க முடியாத ஒரு சிற்றுண்டியாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஓணம் கொண்டாட்டத்தை இனிமையாக்க நாவூறும் பலாப்பழப் பொங்கல்!
பஞ்சாமிர்த தோசை - Traditional Tamil Dosa

இந்த ஓணம் நாளில் “முருகா... என் மனதில் பக்தியை நிறைத்தருள்வாய்!” என்று ஒரு நிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொள்வோம்.

பலாப்பழத்தின் இனிப்பு நாவில் கரையட்டும்...

நெய்யின் மணம் வீடு முழுவதும் பரவட்டும்...

இந்த உணவை தந்தருளிய “முருகா...”

உன் திருநாமம் எங்கள் உள்ளம் முழுவதும் நிறையட்டும்!

வெற்றி வேல்! வீர வேல்!

பழனிமலை முருகனுக்கு அரோகரா....முருகா... முருகா!

logo
Kalki Online
kalkionline.com