ஓணம் கொண்டாட்டத்தை இனிமையாக்க நாவூறும் பலாப்பழப் பொங்கல்!

அறுசுவையும் அன்பும் இணைய நாவிற்கு விருந்தளிக்கும் வித்தியாசமான பலாப்பழப் பொங்கல் ரெசிபி!
பலாப்பழப் பொங்கல்
பலாப்பழப் பொங்கல்AI image
Updated on

“நாம் தமிழ்நாட்டில் வசித்தாலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி, எல்லைகளைக் கடந்து எல்லோரையும் சொந்தமாக பாவித்து கொண்டாடுவதே நம் பண்பாடு.

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையாக இருந்தால் என்ன? பண்டிகைகளுக்குள் என்ன வேறுபாடு இருக்கப் போகிறது? அன்பையும் சகோதரத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதுதானே அதன் நோக்கம்! அந்த உணர்வுடன் நாமும் இணைந்து இந்த ஓணத்தை விமரிசையாகக் கொண்டாடுவோம்!”தமிழகத்தின் பல கல்லூரிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்களில், நிறுவனங்களில் ஓணம் கொண்டாட்டம் கலை கட்டத் தொடங்கியுள்ளது.

ஓணம் வந்துவிட்டாலே வீடெங்கும் ஒரு தனி மகிழ்ச்சி தாளமிடும். வாசலில் அழகான அத்தப்பூக்கோலம், வீட்டுக்குள் கமகமக்கும் சமையல், வாழை இலையில் அணிவகுக்கும் அறுசுவை உணவு... ஓணம் என்றாலே உணவுக்கும் கொண்டாட்டத்துக்கும் பிரிக்க முடியாத பாச பந்தம் தான்! அப்படியொரு நாள் என் தோழி பிரியங்கா வீட்டுக்கு வந்திருந்தார்.

“என்ன நண்பா... ஓணம் ஸ்பெஷலா என்ன சமையல்?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

அப்போது என் பார்வை வீட்டில் நன்றாகப் பழுத்துக் கொண்டிருந்த பலாப்பழத்தின் மீது விழுந்தது.“ இந்த ஓணத்துக்கு நம்ம பலாப்பழத்தையே வைத்து ஒரு வித்தியாசமான இனிப்பு செய்யலாமே!” என்று தோன்றியது.

அடுத்த நிமிடமே சமையலறைக்குள் சென்றுவிட்டேன். நன்றாகப் பழுத்த பலாப்பழச் சுளைகளை நறுக்கி, பாசிப்பருப்பு, பச்சரிசி, மண்டை வெல்லம், நெய், ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ் என ஒவ்வொன்றாகத் தயாரித்தேன்.சமையலறையில் நெய் சூடாகும் வாசனை...அதில் முந்திரி விழுந்ததும் வரும் மணம்...அதனுடன் பலாப்பழத்தின் இயற்கையான இனிப்பு மணம்...வீடே ஓணம் கொண்டாட ஆரம்பித்துவிட்டது போல இருந்தது! பொங்கல் தயாரானதும் பிரியங்காவுக்கு பரிமாறினேன்.

பலாப்பழப் பொங்கல்
பலாப்பழப் பொங்கல்AI image

ஒரு கரண்டி எடுத்து வாயில் வைத்தவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

“என்னாச்சு?” என்றேன்.

“அடடா! இந்த இதமான சூடான பலாப்பல பொங்கல் நாவை வருடுவதும் நாவூற உள்ளே செல்வதும் சொல்ல வார்த்தைகளே இல்லை! நெய் மணமும், ஏலக்காய் வாசனையும், பலாப்பழத்தின் இனிப்பும் சேர்ந்து செம்மையா இருக்கு!” என்று சொல்லி அடுத்த கரண்டியை எடுத்துவிட்டார்.

அந்தப் பாராட்டைக் கேட்ட பிறகுதான், இந்த ஓணம் ஸ்பெஷல் உங்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது! வாங்க... தேன் மதுரப் பலாப்பழப் பொங்கல் செய்வோம்!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1

கப்பாசிப்பருப்பு – ¼ கப்

பழுத்த பலாப்பழச் சுளைகள் – 5 முதல் 6

மண்டை வெல்லம் – தேவையான அளவு

பால் மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்

கிஸ்மிஸ் – 2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன்

முதலில்... பலாப்பழத்தைத் பக்குவப்படுத்துங்கள். பலாப்பழச் சுளைகளை விதை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.பாசிப்பருப்பை லேசாக வறுத்து, நறுக்கிய பலாப்பழத்துடன் சேர்த்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக வேகவைக்கவும்.

அதேபோல், பச்சரிசியைக் கழுவி, பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் குழைய வேகவைத்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாம் ஒன்றாகும் நேரம்! வெந்த அரிசியையும் பலாப்பழம்–பாசிப்பருப்பு கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி மெதுவாகக் கிளறுங்கள். பின்னர் பொடித்த மண்டை வெல்லத்தைச் சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
புடலங்காயில் இத்தனை ருசியான உணவுகளா? நாவூறும் 5 எளிமையான சமையல் குறிப்புகள்!
பலாப்பழப் பொங்கல்

வெல்லம் உருகி பொங்கலுடன் கலந்து, கலவை மெதுவாகக் கெட்டியாகத் தொடங்கும்போது...அடுப்பைச் சுற்றியே நின்றுகொண்டிருக்க வேண்டும் போல ஒரு மணம் வரும்!கடைசியில்... நெய்! ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி முந்திரியைப் பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் கிஸ்மிஸைச் சேர்க்கவும்.கிஸ்மிஸ் நெய்யில் விழுந்ததும் திராட்சை பழங்கள் போல உப்பி வருவதைப் பார்ப்பதே ஒரு அழகு!

அதனுடன் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, இந்தத் தாளிப்பை பொங்கலில் ஊற்றி நன்றாகக் கலந்து இறக்குங்கள். இப்போது ஒரு கரண்டி எடுத்து பாருங்கள்...பொன்னிறத்தில் மின்னும் பொங்கல்...நெய்யின் மணம்...முந்திரியின் சுவை...கிஸ்மிஸின் இனிப்பு...பலாப்பழ தேன் மதுர மணமும் சுவையும்...எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நாக்கில் ஒரு புதுவித சுவையுடன் மகிழ்ச்சி ஏற்படுத்தும்!

பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னவென்றால் பலாப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. பாசிப்பருப்பு தாவரப் புரதத்தையும் நார்ச்சத்தையும் வழங்குகிறது.அதனால் இந்தப் பொங்கலில் சுவையுடன் சில முக்கிய ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. ஆனால் வெல்லம் மற்றும் நெய் சேர்க்கப்படுவதால், இனிப்பு உணவைப் போலவே இதையும் அளவோடு ரசிப்பதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பிரெட் இல்லாமலேயே பிரெட் பக்கோடா செய்யலாமா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
பலாப்பழப் பொங்கல்

ஒரு சின்ன ஓணம் ரகசியம்!

பலாப்பழத்தை மிகவும் ஆரம்பத்திலேயே அரைத்து முழுவதுமாகக் குழைத்து விடாமல், சிறிது பொடியாக நறுக்கி வேகவைத்தால், பொங்கலில் ஆங்காங்கே பலாப்பழத்தின் சுவையான துண்டுகள் கிடைக்கும்.அதுதான் இந்தப் பொங்கலின் தனிச்சிறப்பு!இந்த ஓணம் நன்னாளில்...வாழை இலை விரியட்டும்...அத்தப்பூக்கோலம் மணக்கட்டும்...வீடு முழுவதும் உறவுகள் கூடட்டும்...அதன் நடுவில் ஒரு சம்மடம் தேன் மதுரப் பலாப்பழப் பொங்கல் இருக்கட்டும்!பண்டிகை வேறாக இருக்கலாம்...உணவு வேறாக இருக்கலாம்...ஆனால் அதைச் சுற்றி கூடும் மனிதர்களின் அன்பு மட்டும் என்றும் ஒன்றுதான்! இந்த ஓணம் இனிக்கட்டும்...பலாப்பழப் பொங்கல் போல!

பலாப்பழத்தின் இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த வித்தியாசமான பொங்கலைச் செய்வதன் மூலம், விருந்தினர்களுக்கு ஒரு மறக்க முடியாத சுவையான அனுபவத்தையும் ஆரோக்கியமான பண்டிகை விருந்தையும் வழங்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com