
ஊறுகாய் வகைகளை மரக்கரண்டியால் எடுத்து உபயோகிக்க நீண்ட நாள் கெடாமல் இருப்பதுபோல் உப்பிற்கும் மரக்கரண்டி அல்லது பீங்கான் கரண்டி உபயோகிக்க துருப்பிடிக்காமல் நீண்ட நாள் அப்படியே இருக்கும்.
சிகப்பு மிளகாய் தாளிக்க மிளகாயை இரண்டாக வெட்டி டப்பாவில் வைத்துக்கொள்ள தாளிக்கும்போது சுலபமாக இருக்கும்.
வாழைக்காய், வாழைப்பூ நறுக்கும்போது கையிலும், கட்டிங் போர்டிலும் எண்ணெய் தடவிக்கொண்டு பின் நறுக்க கறை ஏற்படாது.
சமையலின்போது பயன்படுத்தும் கரண்டி, ஸ்பூன்களை அப்படியே பரிமாற உபயோகிக்காமல் கழுவிய பின் உபயோகிக்க பார்க்க நீட்டாக இருக்கும்.
கேசரி, அல்வா போன்றவற்றை பரிமாறும்போது குழி கரண்டியில் உள்பக்கம் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொண்டு பின் எடுத்து பரிமாற அழகாக குழியாக வரும்.
பாத்திரங்களை சூடாக இருக்கும்போது கழுவாதீர்கள். பாத்திரத்தின் வடிவம் மாறிவிடும். சற்று சூடு ஆறியதும் கழுவ வடிவம், நான்ஸ்டிக் எனில் கோட்டிங் மாறாமல் இருக்கும்.
பாத்திரம் துலக்க தரமான வாசிங்பவுடர், லிக்விடை உபயோகிக்க கை சொரசொரப்பு, கீறல் இல்லாமல் நன்றாக இருக்கும்.
வரும் பண்டிகை சீசனில் இனிப்பு செய்வோம். அதற்கு வெல்லப்பாகு, சர்க்கரை பாகு தேவைப்படும். ஒரு கம்பி பதத்தில் சர்க்கரை, வெல்லப்பாகை செய்து ஃப்ரிட்ஜில் வைத்துகொள்ள சட்டென செய்ய சுலபமாக இருக்கும்.
சர்க்கரை கேரமல் செய்து வைத்துக்கொண்டு பாயஸம், புட்டிங் போன்றவை செய்ய கலரும், சுவையும் நன்றாக இருக்கும்.
நட்ஸ், வறுத்த கடலை, முளைவிட்ட பயறு வகைகளை சமைக்கும் போதே இல்லத்தரசிகள் சாப்பிட்டுக்கொள்ள சத்து சேருவதோடு, அசிடிட்டி பிரச்னைகள் வராது.
சுண்டல் வகைகளை அப்படியே தாளித்து வைக்காமல், முதல் நாள் ஊறி, முளைகட்டிய பயறு வகைகளாக செய்ய சுவையோடு சத்தும் சேரும். புட்டும் வழக்கமான அரிசிமாவில் செய்யாமல் பருப்பு வகைகளில் செய்வதோடு சிறுதானிய மாவு, சிறுதானிய வரையில் செய்ய சுவையோடு சத்தும் சேரும்.
பருப்பு பாயசம் வைக்கும்போது பருப்பை வறுத்துவிட்டு ரவையாக்கி இரண்டாம் பாலில் வேகவிட்டு வெந்ததும், மில்க் மெய்ட், வறுத்த நட்ஸ், தேவையெனில் வெல்லம், ஏலத்தூள், நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்த்து கலந்து இறக்க ரிச்சான பருப்பு பாயசம் சுவையாக இருக்கும்.
இனிப்பு பலகாரங்கள் செய்யும்போது சுக்கு, ஜாதிக்காய் ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொடி செய்து சேர்த்துக் கொள்ள சுவை அதிகரிக்கும்.
குங்குமப்பூ விலை அதிகமென்பதால் எல்லாவற்றிலும் சேர்க்க இயலாது. அதே இனிப்பு வகைகள் செய்ய சர்க்கரை பாகில் குங்குமப்பூ சேர்த்து சிரப் தயாரித்து வைத்துக்கொள்ள அதன் சுவை, கலர் கிடைத்து நன்றாக இருக்கும்.