

தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் காலை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்வது கடினமான விஷயமாகவே உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு ருசியான சத்தான காலை உணவை முதல் நாள் இரவே தயாரித்து பயன்படுத்த முடியும் என்றால் நம்புவீர்களா?. இதைத்தான் Overnight Oats எனச் சொல்வார்கள். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் இந்த உணவைத் தயாரிக்க கொஞ்ச நேரம்தான் ஆகும். நீங்கள் எவ்வளவு பிசியான நபராக இருந்தாலும் குறைந்த நேரத்தில் இந்த ஆரோக்கிய ஒட்ஸ் உணவை தயாரித்து வைத்து காலையில் பிரஷ்ஷாக எடுத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
½ கப் ஓட்ஸ்
½ கப் பால்
½ கப் தயிர்
1 ஸ்பூன் சியா விதைகள்
1 ஸ்பூன் தேன்
மேலே அலங்கரிப்பதற்கு உங்களுக்கு விருப்பமான பழங்கள், நட்ஸ் மற்றும் வெண்ணெய்.
செய்முறை
இதை செய்வதற்கு நீங்கள் அதிகம் கஷ்டப்படத் தேவையில்லை. முதலில் ஒரு ஜாடி அல்லது கண்டெய்னர் எடுத்துக்கொண்டு அதில் ஓட்ஸ், பால், தயிர், சியா விதைகள், தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கிளறுங்கள்.
பின்னர் அந்த டப்பாவை மூடி பிரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து விடுங்கள். இந்த கலவை குறைந்தது 4 மணி நேரமாவது பிரிட்ஜில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஓட்ஸ் டப்பாவில் இருக்கும் திரவத்தை உறிஞ்சி மென்மையாக மாறிவிடும்.
காலையில் அலுவலகத்திற்கு செல்லும் சமயத்தில் பிரிட்ஜில் இருந்து டப்பாவை எடுத்து அந்த கலவையை மீண்டும் ஒருமுறை நன்றாகக் கலக்கவும். ஒருவேளை அந்த கலவை கெட்டியாக இருந்தால் கொஞ்சம் அதில் பால் சேர்த்து கலக்குங்கள்.
இறுதியாக அந்த கலவையில் பழங்கள், நட்ஸ் போன்ற உங்களுக்கு விருப்பமான டாப்பிங்ஸ் சேர்த்து அலங்கரித்தால் Overnight Oats Recipe தயார். ஒரே இரவில் தயாராகும் சுவையான மற்றும் சத்தான இந்த உணவை காலையில் எந்த சிரமமும் இன்றி நேரடியாக எடுத்து சுவைக்கலாம்.