
பேரிச்சம்பழ பக்கோடா
தேவை:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 12
கோதுமை மாவு - 1 கப்
முந்திரி - 12
சர்க்கரை - அரை கப்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு முந்திரிப் பருப்பை செருகி மூடவும். சர்க்கரை கரைத்த நீரில் கோதுமை மாவைக் கலந்து, அதில் பேரீச்சம் பழத்தை தோய்த்து, காய்ந்த நெய்யில் பொரித்து எடுத்தால், இனிப்பான, புதுவித பேரிச்சம்பழ பக்கோடா தயார்.
ஓட்ஸ் பக்கோடா
தேவை:
ஓட்ஸ் - 1 கப்
கடலை மாவு - அரை கப்
தண்ணீர் - 1 கப்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
நீரை சூடாக்கி இறக்கிவைத்து, ஓட்ஸை போடவும். அது ஊறியதும், உப்பு, கடலை மாவு, மிளகு சீரகத்தூள் கலந்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓட்ஸ் கலவையை உருட்டி உருட்டிப் போட்டு, பொரித்து எடுக்கவும். மொறு மொறு ஓட்ஸ் பக்கோடா தயார்.
வாழைப்பூ பக்கோடா
தேவை:
வாழைப்பூ - ஒரு கப்
கடலைமாவு - அரை கப்
அரிசிமாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
சோளமாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சமையல்சோடா - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைப்பூவை நரம்பு நீக்கி, நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, பெருங்காயம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாம் சேர்த்துப் கலக்கவும். பின் அதில் சிறிது நீர் தெளித்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூ கலவையை உதிர் உதிராக போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாழைப்பூ பக்கோடா தயார்.
ராகி வெந்தயக்கீரை பக்கோடா
தேவை:
ராகி மாவு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, வெந்தயக்கீரை – ஒரு சிறிய கட்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ராகி மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து ஆய்ந்த வெந்தயக்கீரை, சீரகம், கறிவேப்பிலை, மல்லிதழை சேர்த்துப் பிசிறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான ராகி மேத்தி பக்கோடா தயார்.