
வெயிலுக்கு இதமான பதமான பனை நுங்குகள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நிவாரணம் தரும். மேலும், சருமப்பிரச்னைகளுக்கும் நல்லது. குறிப்பாக வெயிலின் தாக்கத்தால் உண்டாகும் வேர்க்குரு, கொப்புளங்களுக்கு மருந்தாகிறது.
நுங்குவின் தோல் பகுதி துவர்ப்பு சுவை கொண்டது எனினும் அதில்தான் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி உள்ளிட்ட அநேக சத்துக்கள் அடங்கி உள்ளது.
இரத்த சோகை முதல் சர்க்கரை பாதிப்பு வரை தீர்வு தரும் நுங்கில் இப்படி செய்து தந்தால் பிள்ளைகள் சூப்பராக ருசிப்பார்கள்.
நுங்கு சர்பத்
தேவை:
நுங்குகள் - 5
நன்னாரி சிரப் அல்லது விருப்பத்திற்கு ஏற்ற சிரப்- 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - சிறிது
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
தோல் நீக்கி துண்டுகளாக்கிய நுங்கை மிக்சியில் நன்றாக அடித்து ஏலக்காய் தூள் சேர்த்து நன்னாரி சர்பத் அல்லது பிடித்த சிரப்பை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் 1 கப் நீர் சேர்த்து ஐஸ்கட்டிகளையும் சேர்த்து டம்ளரில் ஊற்றித் தரலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நுங்கு சர்பத்துக்கு இந்த வெயில் காலத்துக்கு நன்னாரி சிரப் மட்டுமே ஏற்றதாக இருக்கும்.
நன்னாரி சிரப் மளிகை கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை எனில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நன்னாரி வேரை வாங்கி சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். அது அரை டம்ளராக வற்றியதும் இறக்கி ஆறவைத்து வடிகட்டி தேவையான சர்க்கரை சேர்த்தால் அதுவே நன்னாரி சிரப்.
நுங்கு திக் கீர்
தேவை:
தோல் நீக்கி துண்டுகளாகிய நுங்கு- 2 கப் பால் - 1/2 லிட்டர்
கண்டஸ்டன்ட் மில்க் - 2 டேபிள்ஸ்பூன்.
சர்க்கரை - 1/2 கப்
முந்திரி பருப்பு - 1டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 10
செய்முறை:
பாதி அளவு நுங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். மீதமுள்ள நுங்கை மிக்ஸியில் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை தண்ணீர் கலக்காமல் ஊற்றி சர்க்கரை சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு பாதியாக சுண்டியதும் கண்டஸ்டன்ட் மில்க் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் எடுத்து அரைத்த நுங்கு விழுது சேர்த்து ஏலக்காய் தூள், துருவிய முந்திரி பருப்பு சேர்த்து பருகலாம். இது கொஞ்சம் ரிச் என்றாலும் வயிறு நிறைய வைக்கும் கீர் ஆகும்.
நுங்கு மில்க் ஷேக்
தேவை:
தோல் சீவி நறுக்கிய நொங்குகள்- 2 கப்
கெட்டிப்பால்- 1 கப்
சர்க்கரை - 4 டேபிள்ஸ்
வெண்ணிலா ஐஸ்கிரீம் – தேவைக்கு
செய்முறை:
பாலை காய்ச்சி ஆறவைக்கவும். நுங்குகளை ஆறவைத்த பால், சர்க்கரை சேர்த்து அடித்து வெண்ணிலா ஐஸ்கிரீமை மேலே போட்டு ஐஸ் கிரீமுடன் சேர்த்து பரிமாறவும். வெண்ணிலா ஐஸ்கிரீம் வேண்டாம் என்பவர்கள் சாதாரண கிரீம் அல்லது வேறு பிளேவர் சேர்த்தும் செய்யலாம்.