குழந்தைகளுக்கு பிடிச்ச மயோனைஸ், ஆனா 100% ஹெல்தி! வெறும் 2 நிமிடத்தில் மேஜிக் ரெசிபி!

Veg Mayonnaise
Paneer Mayonnaise
Published on

ப்போதெல்லாம் குழந்தைகள் ஷவர்மா, சாண்ட்விச், பர்கர் என்று எதைக் கேட்டாலும், கூடவே 'மயோனைஸ்' (Mayonnaise) இல்லாமல் சாப்பிடுவதில்லை. ஆனால், கடையில் வாங்கும் மயோனைஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று பார்த்தால் நமக்கே அதிர்ச்சியாக இருக்கும். அதில் 80% சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான் இருக்கின்றன. இது உடலுக்குத் தீங்கானது என்று தெரிந்தும், அதன் சுவைக்காக நாம் அதைத் தவிர்க்க முடிவதில்லை. 

சுவையும் வேண்டும், அதே சமயம் ஆரோக்கியமும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த 'பன்னீர் மயோனைஸ்'. இதில் எண்ணெய் மிகக் குறைவு, ஆனால் புரோட்டீன் அதிகம். இதைச் செய்வதும் மிக மிக சுலபம். வாருங்கள், இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • ஃப்ரெஷ் பன்னீர் - 100 கிராம் 

  • காய்ச்சிய பால் - ¼ கப்

  • பூண்டு - 2 பற்கள்

  • மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்

  • சர்க்கரை - ½ டீஸ்பூன்

  • எலுமிச்சை சாறு அல்லது வினிகர் - 1 டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் பன்னீரைத் தயார் செய்யவேண்டும். நீங்கள் கடையில் வாங்கிய பன்னீராக இருந்தால், அதைச் சுடுநீரில் ஒரு 5 நிமிடம் போட்டு மென்மையாக்கிக் கொள்ளுங்கள். 

வீட்டில் செய்த பன்னீர் என்றால் அப்படியே பயன்படுத்தலாம். பன்னீர் மிகவும் சாஃப்டாக இருக்க வேண்டியது அவசியம், அப்போதுதான் மயோனைஸ் கடையில் கிடைப்பதுபோல 'க்ரீமியாக' வரும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: கனவு கண்ட சிறிய விதை!
Veg Mayonnaise

ஒரு சிறிய மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகள், தோல் உரித்த பூண்டு பற்கள், மிளகுத்தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

இதோடு அந்தப் புளிப்புச் சுவைக்காக எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்க்கவும். கடை மயோனைஸில் இருக்கும் அந்த மினுமினுப்புத் தன்மை வேண்டும் என்றால் மட்டும், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்க்கலாம். ஆனால், இது கட்டாயமில்லை.

இப்போது மிக்ஸியை மூடி, முதலில் தண்ணீர் அல்லது பால் ஊற்றாமலே ஒருமுறை நன்கு அரைத்துக்கொள்ளவும். பன்னீர் நன்கு பொடிந்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல வரும்.

இதையும் படியுங்கள்:
99% மனித வரலாறு காடுகளில்தான்: நாம் இன்று வாழும் 'நாகரீக வாழ்க்கை' ஒரு விபத்தா?
Veg Mayonnaise

இந்த சமயத்தில், நாம் காய்ச்சி ஆறவைத்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவேண்டும். மொத்தமாக ஊற்றிவிடக்கூடாது. ஒரு ஸ்பூன் பால் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் அடிக்கவும்.

இடையிடையே ஜாரைத் திறந்து ஸ்பூனால் கலந்துவிட்டு, தேவையான அளவு பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். பன்னீரின் துகள்கள் எதுவும் இல்லாமல், வெண்ணெய் போல வழவழப்பாக வரும் வரை அரைக்க வேண்டும். மயோனைஸ் எந்தப் பதத்திற்கு தேவையோ, அதற்கேற்ப பாலைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

கலப்படமில்லாத, அதிக எண்ணெய் இல்லாத "ஹெல்தி பன்னீர் மயோனைஸ்" தயார். இதைச் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் 3 முதல் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com