
வீட்டுத் தோட்டத்தில் பரங்கிக்காய் காய்த்து கிடந்தால் சுவையான அடை (recipes) செய்து சாப்பிடலாம். அதை மற்றவர்களுக்கும் கொடுத்து ருசிக்க வைக்கலாம். அதை செய்யும் முறை இதோ:
பரங்கிக்காய் அடை செய்ய தேவையான பொருட்கள்
துருவிய பரங்கிக்காய்-ஒரு கப்
புழுங்கல் அரிசி -ஒரு கப்
பச்சரிசி -அரை கப்
கடலைப்பருப்பு- கைப்பிடி அளவு
பாசிப்பருப்பு -கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு ,இரண்டு கைப்பிடி அளவு
மிளகாய் வற்றல்- ஐந்து
சோம்பு, சீரகம் தலா -அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு
சின்ன வெங்காயம் -10பொடியாக நறுக்கியது
தேங்காய் துருவல் -மூணு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தனியா -ஒரு கைப்பிடி
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகள் அனைத்தையும் நன்றாக ஊறவைத்து, அதனுடன் மிளகாய் வற்றல், சோம்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தமாவுடன் பரங்கிக்காய் துருவல், தேங்காய் துருவல், வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா கருவேப்பிலை, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். தோசை கல்லை ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் சிறிய அடைகளாக ஊற்றி நடுவிலும் ,சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு முறுகலாக எடுக்கவும். கம கம வாசனையுடன் ருசி அசத்தலாக இருக்கும். அப்படியே சாப்பிடலாம். விருப்பப்பட்ட எந்த சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
கர்ஜிக்காய்
செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு- ஒரு கப்
வெல்லத் துருவல் -ஒரு கப்
ஏலத்தூள் -ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
வறுத்து பொடித்த உளுந்து- ஒரு டீஸ்பூன்
நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு, அதில் தேங்காயை நன்றாக வறுத்து சர்க்கரையை கலந்து ஏலப்பொடி தூவி இறக்கி வைக்கவும். பூரணம் ரெடி.
அடி கனமான பாத்திரத்தில் ஒன்னே முக்கால் கப் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் மாவை அதில் சேர்த்து கிளறி, ஆறவைத்து உளுந்து மாவை சேர்த்துக்கிளறி பிசைந்து விடவும்.
கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு இந்த மாவில் இருந்து சிறிது எடுத்து கிண்ணம்போல செய்து நடுவில் வெல்ல பூரணத்தை வைத்து மூடி, கையால் லேசாக வைத்து அழுத்தினால் நீளமாக ஒரு வடிவம் கிடைக்கும். அதை எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வேகவிட்டு எடுத்தால் ஒரே அளவாக, அழகாக கருகாமல் சிவந்து இருக்கும் கர்ஜிக்காய் ரெடி.