
எவ்வளவுதான் நவீன ரக ரெசிபிகள் வந்தாலும் நம் பாட்டி , அம்மா காலத்து குழம்பு வகைகள் மணம் அப்படியே நாவில் தங்கும். அந்தக்காலத்தில் விருந்தினர் வந்தால் செய்யப்படும் அந்தஸ்தான குழம்பு வகைகளில் பருப்பு உருண்டை குழம்பு மற்றும் இந்த மனோரஞ்சித குழம்பு வகைகள் இடம் பிடிக்கும்.
அந்த வகையில் பாட்டி சொல்லிக்கேட்ட ரெசிபியான மனோரஞ்சிதக் குழம்பு மற்றும் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபிகள் இங்கே..
மனோரஞ்சித குழம்பு
தேவை:
வடை செய்ய
உளுத்தம் பருப்பு - 1 கப்
கொத்தமல்லி(தனியா) - 1டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய்- 2
பட்டை சோம்பு- சிறிது
எண்ணெய் - பொறிக்க
குழம்புக்கு
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம்- 4
தேங்காய்- 1 கப்
சிவப்பு மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
கடுகு - சிறிது
எண்ணெய் – தாளிக்க
செய்முறை:
உளுத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து வடித்து வடை செய்வதற்கு ஏதுவாக பச்சை மிளகாய் தனியா சோம்பு, சேர்த்து பொங்க ஆட்டி கடைசியில் உப்பு சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு வடை மாவை நெல்லிக்காய் அளவு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு சுட்டு எடுத்து வடிகட்டில் வைக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீரகம், மிளகாயை அரைத்துக்கொள்ளவும். தேங்காயைதா துருவி பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு போட்டு நன்கு வதக்கவும்.
தேங்காய் பாலில் அரைத்த சீரகவிழுதைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கிழங்கு வெந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் வடைகளை போட்டு இறக்கி கொத்தமல்லி தழை தூவி மூடி வைக்கவும். வடைகளை போடும்போது குழம்பு சற்றே நீர்க்க இருக்கவேண்டும் ஏனெனில் குழம்பை வடைகள் இழுத்து கெட்டியாகிவிடும். ஆகையால் அதற்கு ஏற்றார்போல் குழம்பை தயார் செய்து வடைகளை போட்டு குழம்புடன் பரிமாற வேண்டும்.
பருப்பு உருண்டை குழம்பு
தேவை:
பருப்பு உருண்டை தயாரிக்க
துவரம் பருப்பு அல்லது கடலைப்பருப்பு- 2 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மிளகாய் - 3
கருவேப்பிலை கொத்தமல்லி தழை - தேவையானது
உப்பு- சிறிது
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நன்கு அரைத்து அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெயில் வடை மாதிரி போட்டு எடுக்கவும். அல்லது இட்லி பாத்திரத்தில் அந்த வடைகளை வேகவைத்து எடுத்துக் கொள்வதும் ஒருமுறை.
இந்த பருப்பு உருண்டைகளை புளிக்குழம்பு அல்லது தேங்காய் பால் ஊற்றி வைக்கும் குழம்பில் போட்டு சோற்றுக்கு ஊற்றி சாப்பிடலாம். புளி குழம்பாக வைப்பதாக இருப்பின் சிறு புளி விட்டு மசால் கலந்து தாளிதம் செய்து நன்கு கொதித்து வந்தபின் பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறு தீயில் வைத்திருந்து இறக்க வேண்டும்.
தேங்காய் பால் ஊற்றி குழம்பு வைக்கும்போது தக்காளி அல்லது முட்டை குழம்புபோல் அவரவர் சாய்ஸ்ல் தயார் செய்து இறக்கம் சமயம் இந்த பருப்பு உருண்டைகளை போட்டு இறக்கலாம்.