பிள்ளையார்பட்டி ஸ்பெஷல்... பஞ்சு போல மென்மையான மோதகம் ரகசியம்!

அரிசி, பாசிப்பருப்பு சேர்த்திடும் பாரம்பரிய பிரசாத கொழுக்கட்டை சுவையாக செய்முறை இதோ.
பிள்ளையார்பட்டி மோதகம்
பிள்ளையார்பட்டி மோதகம்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

1. பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை:

பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பிரசாதமாக வழங்கப்படும் பாரம்பரியமான பிள்ளையார்பட்டி மோதகம் செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்வோமா?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்

பாசிப்பருப்பு -1/4 கப்

பொடித்த வெல்லம் -1 1/2 கப்

துருவிய தேங்காய் -1/2 கப்

ஏலக்காய்த்தூள் -3/4 ஸ்பூன்

நெய் -2 ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் -3 கப்

செய்முறை :

பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக லேசாக மணம் வரும் வரை வறுத்து பொடியான ரவை பதத்திற்கு பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 3 கப் தண்ணீர் விட்டு அதில் நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். தண்ணீர் நடுக்கொதி வந்ததும் பொடித்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற அடி பிடிக்காது. இதனுடன் பொடித்த வெல்லம், துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். கலவை நன்கு ஒன்று சேர்ந்து திரண்டு வரும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.

சூடு ஆறியதும் கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு லெமன் சைஸில் உருண்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். விநாயகருக்கு பிடித்தமான பிள்ளையார்பட்டி மோதகம் தயார்.

2. கோவா கொழுக்கட்டை:

கோவா கொழுக்கட்டை என்பது விநாயகர் சதுர்த்தி மற்றும் விசேஷ நாட்களில் செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகையாகும். வழக்கமான தேங்காய் பூரணத்திற்கு பதிலாக, நாவில் கரையும் பால்கோவாவை பூரணமாக வைத்து செய்வது மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு (அ) கொழுக்கட்டை மாவு -1 கப்

தண்ணீர் -11/2 கப்

நெய் -1 ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

பூரணம்:

சர்க்கரை இல்லாத கோவா (Khoya) -1 கப்

பொடித்த சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை -4 ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் -1/2 ஸ்பூன்

நெய் -1 ஸ்பூன்

முந்திரி, பாதாம் துண்டுகள் -தேவைக்கேற்ப

பிள்ளையார்பட்டி மோதகம்
பிள்ளையார்பட்டி மோதகம்Geminj image

செய்முறை :

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பொடித்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் சர்க்கரை இல்லாத கோவாவைச் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறவும். கோவா இளகி வரும் சமயம் அடுப்பை அணைத்துவிடவும்.

கோவா ஓரளவு ஆறியதும் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.

மேல் மாவு தயாரிக்க:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரிசிமாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.

மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். மாவு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொண்டு மாவை விரிசல் இல்லாமல் மென்மையாக பிசைந்துகொள்ளவும்.

பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டை எடுத்து, அதை கிண்ணம்போல குழியாக செய்து கொள்ளவும். அதன் நடுவில் தயாராக செய்து வைத்துள்ள பால்கோவா பூரண உருண்டையை வைக்கவும். மாவை எல்லா பக்கங்களிலிருந்தும் மூடி மோதகம் வடிவிலோ அல்லது அரைக்கோள கொழுக்கட்டை வடிவிலோ செய்து கொள்ளவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்க சுவையான பால்கோவா கொழுக்கட்டைத் தயார்.

இதையும் படியுங்கள்:
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெடிக்காமல் மென்மையான கொழுக்கட்டை செய்ய சூப்பர் டிப்ஸ்!
பிள்ளையார்பட்டி மோதகம்

3. கார பிடி கொழுக்கட்டை:

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு -2 கப்

தேங்காய் துருவல் -1/2 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு -சிறிதளவு

பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் -2

கறிவேப்பிலை -சிறிது

பெருங்காயத்தூள் -சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு- தேவையானது

செய்முறை :

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதில் தண்ணீர் 4 கப் விட்டு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். நடுக்கொதி வந்ததும் அரிசி மாவை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கட்டியில்லாமல் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திற்கு சுடச்சுட மொறுமொறு பக்கோடா: எண்ணெய் குடிக்காமல் செய்ய இதோ வழி!
பிள்ளையார்பட்டி மோதகம்

சிறிது ஆறியதும் கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு மாவை பிடி கொழுக்கட்டை வடிவில் பிடித்து, இட்லி பாத்திரத்தில் வைத்து ஏழெட்டு நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்க மிகவும் சுவையான கார பிடி கொழுக்கட்டை தயார். இதேபோல் இனிப்பு பிடி கொழுக்கட்டையும் செய்யலாம். அதற்கு உப்பு, மிளகாய்க்கு பதிலாக வெல்லம், ஏலக்காய் சேர்த்து செய்ய நன்றாக வரும்.

பாரம்பரிய பிள்ளையார்பட்டி மோதகம் கற்பக விநாயகர் கோவில் பிரசாதத்தின் அதே தெய்வீக சுவையையும் மென்மையையும் உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com