
உப்புமாவுக்கு நீர் கொதிக்கும் போது, சிறிது புளித்த மோர் சேர்த்தால், உப்புமாவின் சுவைகூடும்.
உப்புமாவை கிளறி இறக்குவதற்கு முன், இரண்டு மூன்று ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்க்கலாம்.
உப்புமா தயாரானதும், உடனே எடுத்து பரிமாறவோ. ஹாட் பாக்ஸில் எடுத்து வைக்கவோ கூடாது. ஐந்து நிமிடங்களுக்காவது செட் ஆக விடவேண்டும்.
நெய்யில் வறுத்த முந்திரியை உப்புமாவில் சேர்த்தால், உப்புமாவின் சுவை பலமடங்கு கூடும்.
எலுமிச்சைசாறு அல்லது ஆம்சூர் பொடி (மாங்காய் பொடி) கலந்தால் உப்புமாவின் சுவை கூடும்.
ரவையை சிறிது நெய்விட்டு வறுத்து விட்டு உப்புமா செய்தால், உப்புமா மணமாக இருப்பதோடு, பதமாகவும் வரும்.
எந்த உப்புமாவானாலும் உடனே வேறு பாத்திரத்துக்கு மாற்றி விட்டால் வாணலி சூட்டினால் உப்புமா கெட்டியாகி, இறுகுவதைத் தவிர்க்கலாம்.
அரிசியைக் களைந்து, அரைமணி நேரம் நன்கு உலர்த்தி, ரவையாக பொடித்து, அரிசி உப்புமா செய்தால், சுவையாக இருக்கும்.
ரவை உப்புமாவுக்கு ஒரு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு தண்ணீரும், கோதுமை ரவை உப்புமாவுக்கு ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டரை பங்கு தண்ணீரும், சேமியா உப்புமாவுக்கு சேமியாவுக்கு சம அளவு தண்ணீரும் தேவை.
பொங்கல் சுவையாகவும், மணமாகவும் இருக்க சில டிப்ஸ்...
சர்க்கரை பொங்கலுக்கு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்து விட்டு, இரண்டரை பங்கு நீர், இரண்டு ஸ்பூன் நெயவிட்டு, குக்கரில் வேக வைத்தால், சீக்கிரமும் வெந்து விடும். மணமும் கூடும்.
வெண்பொங்கலுக்கு நான்கு பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு பாசிப்பருப்பு என்ற அளவிலும், தண்ணீர் இரண்டரை பங்கும் எடுத்துக் கொண்டால் பொங்கல் பதமாக இருக்கும்.
வெண் பொங்கலில் மிளகை ஒன்று இரண்டாக உடைத்து போட்டால், பொங்கலுடன் இணைந்திருக்கும். மிளகை தனியாக எடுத்து வைக்க வேண்டி இருக்காது.
ரவா பொங்கலுக்கு ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்தால், பொங்கல் நல்ல பதத்தில் அமையும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி வெந்த அரிசி, பருப்பில் கலந்துகிளறினால், பொங்கலில் வெல்லம் நன்றாகவும், சீக்கிரமும் சேர்ந்துவிடும்.
கோதுமை ரவை பொங்கலுக்கு நீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால் சுவைகூடும்.
இனிப்பு பொங்கலுக்கு நீருடன், சமஅளவு பால் கலந்து வேக வைத்தால், சுவையாக இருக்கும்.
எந்தப் பொங்கல் என்றாலும் தாளிப்பில் முந்திரி பருப்பை சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
பொங்கலைக் கிளறும்போது, சிறிது சிறிதாக நெய் விட்டால், மணம் கூடும் பொங்கல் அடிபிடிக்காது.
இனிப்பு பொங்கலுக்கு வெல்லம் மட்டுமின்றி, கருப்பட்டி, நாட்டு சர்க்கரையையும் பயன்படுத்தலாம்.
வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானியங்களிலும் பொங்கல் செய்யலாம்.