
உளுந்து வடைக்கு பருப்பு ஊறவைக்கும்போது, ஒரு பிடி துவரம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்தால் வடை அதிக எண்ணெய் குடிக்காது என்று மட்டுமல்லாமல், அதிக நேரம் ருசி மாறாமலும் இருக்கும்.
ரவா உப்புமா மீந்துவிட்டால் அதனுடன் சிறிது அரிசி மாவு கலந்து வடை செய்யுங்கள். ருசியாக இருக்கும். மசால்வடை செய்யும்போது பட்டாணி பருப்பு இரண்டு டம்ளரும், உளுந்து அரை டம்ளரும் சேர்த்து அரைத்து, வெங்காயம், உப்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து வடை சுட சுவையாக இருக்கும். வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.
உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவைத்தூள் செய்து போட்டு வடை செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
மூன்று உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துப் பிசைந்து வடைகளாக தட்டினால் சுவையோ, சுவை.
வடை பொரிக்கும்போது சிறிது உப்பு போட்டால் வடை அதிகம் எண்ணெய் குடிக்காது.
200 கிராம் உளுத்தம் பருப்பை மூன்று மணிநேரம் ஊறவைத்த பிறகு, கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
அதில் நான்கு டேபிள் ஸ்பூன் அரிசி மாவைத்தூவி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை அரைத்துப் போட்டு, நிறைய கொத்துமல்லித் தழையை அரிந்துபோட்டால் செய்யும் வடை ஹோட்டல் வடை போல் இருக்கும்.
உளுந்து வடைக்கு அரைக்கும்போது, மிக்ஸியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு அரைத்தால் மிக்ஸியிலிருந்து மாவை சுலபமாக எடுக்க முடியும்.
சிறிது தயிர் விட்டு வடைக்குமாவு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும்.
பருப்புவடை மீந்துவிட்டால் மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கிளறி இறக்க உசிலி சுவையாக இருக்கும்.
வடை செய்யும்போது எண்ணெயில், ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப்போடுங்கள். பொரித்த வடை மணமாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது.
தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்பொழுது, மாவின் அளவுக்கு தகுந்த மாதிரி ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு ஆட்டி தயிர் வடை செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.