

காலை நேரப் பரபரப்பில் வேலைக்குச் செல்வோர் மற்றும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவோர் "இன்னைக்கு என்ன சட்னி அரைக்கிறது?" என்று யோசிப்பதே ஒரு பெரிய வேலை. இதற்கு ஒரு அருமையான தீர்வுதான், வீட்டில் அரைத்து வைத்துக்கொள்ளும் இட்லிப் பொடிகள்.
அதிலும், செரிமானத்திற்கு மிகவும் உதவக்கூடிய பூண்டை வைத்து 4 விதமான சுவைகளில் பொடி அரைத்து வைத்துக்கொண்டால், வாரம் முழுவதும் சட்னி கவலையே இருக்காது. வாசனையும் சுவையும் சுண்டி இழுக்கும் அந்த 4 வகையான பூண்டு பொடிகளை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
1. பாரம்பரிய பருப்பு பூண்டுப் பொடி!
தேவையான பொருட்கள்: தோல் நீக்காத பூண்டு - 1 கைப்பிடி, உளுத்தம் பருப்பு - 1/2 கப், கடலைப் பருப்பு - 1/4 கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் தட்டி வைத்துள்ள பூண்டுப் பற்களை சேர்த்து ஈரப்பதம் போக வதக்கவும். ஆறியதும், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் பொடி தயார்.
2. ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை பூண்டுப் பொடி!
தேவையான பொருட்கள்: தோல் உரித்த பூண்டு - 15 பற்கள், வறுத்த தோல் நீக்கிய வேர்க்கடலை - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சீரகம், காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வாசனை வர வறுக்கவும். லேசாக எண்ணெய் விட்டு பூண்டு மற்றும் புளியை வதக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை, உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள பொருட்களைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இது சூடான சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
3. கறிவேப்பிலை பூண்டுப் பொடி!
தேவையான பொருட்கள்: பூண்டு - 15 பற்கள், கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், தனியா - 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறிவேப்பிலையை நன்கு கழுவி காயவைத்து, கடாயில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். பின்னர் தனியா, உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்து எடுக்கவும். பூண்டை லேசாக எண்ணெயில் வதக்கி, எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்தால் வாசனையான கறிவேப்பிலை பூண்டுப் பொடி ரெடி.
4. கொப்பரைத் தேங்காய் பூண்டுப் பொடி!
தேவையான பொருட்கள்: பூண்டு - 10 பற்கள், துருவிய கொப்பரைத் தேங்காய் - 1/2 கப், உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொப்பரைத் தேங்காயை மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்து எடுக்கவும். பூண்டை லேசாக வதக்கி, ஆறிய பின் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைப்பதால் இது சீக்கிரம் கெட்டுப்போகாது.
இந்த 4 வகையான பூண்டுப் பொடிகளையும் நன்றாக ஆறிய பிறகு, தனித்தனி கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். சுடச்சுட மல்லிகைப்பூ இட்லியின் மேல் இந்தப் பொடியைத் தூவி, தாராளமாக நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த ரெசிபிகளை இந்த வார இறுதியில் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.