

குக்கர் வெடிப்பைத் தடுக்க தினசரி பராமரிப்பு முக்கியம் என இந்த கட்டுரை எச்சரிக்கிறது. நீராவி வெளியேறும் குழாயை சுத்தம் செய்தல், கேஸ்கெட்டை மாற்றுதல், 66% மட்டுமே நிரப்புதல், பாதுகாப்பு வால்வைச் சரிபார்த்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் கூறப்படுகின்றன. மேலும், IoT ஸ்மார்ட் குக்கர்கள் விசில் கணக்கிட்டு கேஸை தானாக அணைக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துகிறது.
பிரஷர் குக்கர்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
ஒரு பிரஷர் குக்கர் என்பது அடிப்படையில் ஒரு மூடிய பாத்திரம் போன்றது, இதிலிருக்கும் நீர் ஆவியாக மாறி; குக்கருக்குள் அழுத்தத்தை (பிரஷர்) சுமார் 15 PSI வரை உயர்த்துகிறது. இது குக்கரில் மிச்சமிருக்கும் நீரின் கொதிநிலையை 100°C-லிருந்து கிட்டத்தட்ட 125°C-ஆக அதிகரிக்கிறது. இதனால் உணவு வேகமாக வேகவும், ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கவும் முடிகிறது.
அதிலிருந்து வரும் ஒவ்வொரு விசில் சத்தமும், குக்கர் அதிகப்படியான நீராவியை வெளியேற்றுகிறது என்பதாகும். எனவே, விசில்கள் ஒரு பாதுகாப்பு அம்சமாகவும், சமையலுக்கான நேரமாகவும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு விசிலையும் எப்படி புரிந்துவைக்கலாம்?
இந்திய சமையலறைகளில் குக்கரில் வைக்கும் ஒவ்வொரு உணவையும் அதன் சமைக்கும் நேரத்தை விசில் எண்ணிக்கையுடன் தொடர்புபடுத்தி கொள்கிறோம். அரிசிக்கு பொதுவாக 1-2 விசில்கள் தேவைப்படும், அதே சமயம் துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளுக்கு 3-4 விசில்களும், கொண்டைக்கடலை போன்ற கடினமான பயறு வகைகளுக்கு 8-10 விசில்களும் தேவைப்படலாம். மேலே கூறியதுபோல் விசில் எண்ணிக்கை, அழுத்தம் (பிரஷர்) உருவாகி வெளியேறும் விதத்தை நமக்கு பிரதிபலிக்கிறது. இதுதான் உணவு சீராக வேகவைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
பருப்பு மற்றும் அரிசியை எப்படி முறையாக சமைக்கலாம்?:
பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, அதன் சமையல் நேரத்தையும், எரிவாயு பயன்பாட்டையும் குறைக்க அவற்றை முன்கூட்டியே ஊறவைக்க வேண்டும். குக்கரில் அடி பிடிக்காமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் அதில் சேர்க்க வேண்டும். இதோடு குக்கரில் நிலையான அழுத்தத்தைப் பராமரிக்க முதல் விசில் வந்த பிறகு ஸ்டோவ் தீயைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
அரிசியை சரியான நீர் அளவுடன் குக்கரில் சமைத்திடுங்கள். பொதுவாக ‘ஒவ்வொரு கப் பாஸ்மதி அரிசியையும் சரியாக வேகவைக்க, இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவேண்டும் (1:2). இறுதியில் சாதம் உதிரியாக இருப்பதற்காக 1-2 விசில் வந்த பிறகு ஸ்டோவை அணைத்தவுடன் உடனடியாக குக்கரை திறக்காமல்; அதனுள் இருக்கும் பிரஷர் ‘இயற்கையாக வெளியேறும்’ வரை காத்திருக்க வேண்டும்.
குக்கர் வெடிப்புகளை தடுக்க தேவையான தினசரி பராமரிப்பு:
நீராவி(Steam) வெளியேற முடியாதபோது இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன.
● குக்கரில் ஒட்டியுள்ள பழைய உணவுத் துகள்கள் நீராவி வெளியேறுவதை தடுக்கலாம், எனவே ‘அழுத்தம் அல்லது புகை வெளியேறும்’ குழாயை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
● ‘குக்கரில் உள்ள பிரஷர்’ வீணாக வெளியேறாமல் இருக்க, தேய்ந்துபோன கேஸ்கெட்டுகளைத் (gaskets) தவறாமல் மாற்ற வேண்டும்.
● குக்கரின் மொத்தக் கொள்ளளவில் சுமார் 66% (மூன்றில் இரண்டு பங்கு) வரை மட்டுமே நிரப்ப வேண்டும். உதாரணமாக, 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட குக்கரில், அதிகபட்சமாக 2 லிட்டர் அளவுள்ள உணவு மற்றும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
● குக்கரில் உள்ள பாதுகாப்பு வால்வுகள் (Safety valves) சரியாகச் செயல்படுகின்றனவா! என்று சரிபார்க்க வேண்டும்.
குக்கர் சமையல் பாதுகாப்பானது மற்றும் ஊட்டச் சத்துக்களைப் பாதுகாக்கக்கூடியது என்றும், பருப்பு வகைகளில் உள்ள பைட்டேட்டுகள், லெக்டின்கள் (phytates and lectins) போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களைக் குறைத்து, அவற்றை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது என்றும் அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.
இந்தியாவில் உள்ள மேம்பட்ட சமையல் குக்கர்கள் (2026):
ஹைதராபாத்தைச் சேர்ந்த IoT யில் இயக்கப்பட்ட (முற்றிலும் இணையத்தில் இயங்கும் ஸ்மார்ட் குக்கர்கள்), மொபைல் செயலிகள் வழியாக விசில் சத்தங்களைத் தானாகவே கணக்கிட்டு, எரிவாயுவை (கேஸ் ஸ்டவை) அணைத்துவிடுகின்றன. இதன் மூலம், அதிகப்படியான சமையல் நேரமும், விபத்துகளையும் தடுக்க முடியுமாம்.
இந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சமையலறை விபத்துகளை முற்றிலும் தவிர்த்து, உணவின் ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் விரைவாகவும் நம்பிக்கையுடனும் சமைக்கும் திறனைப் பெறலாம்.