

தற்போது பலரும் செல்போனை பாத்ரூம் உள்ளிட்ட இடங்களுக்கும் கூட எடுத்துச் செல்கிறார்கள். மழையிலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ செல்போனில் தண்ணீர் பட்டுவிட்டால் செய்யக்கூடாத தவறுகள் பற்றியும், செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
செய்யக்கூடாத தவறுகள்:
வாயால் ஊதுவது:
சார்ஜிங் போர்ட்டின் உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்ற, நாம் வாயால் பலமாக ஊதுவது வழக்கம். இது மிகவும் தவறான செயல்! இப்படி ஊதும்போது, வெளியில் இருக்கும் தண்ணீரை காற்றின் அழுத்தம் இன்னும் ஆழமாக உள்ளே தள்ளி, டிஸ்ப்ளே மற்றும் மதர்போர்டுக்குள் கொண்டு சேர்த்துவிடும்.
ஆல்கஹால் அல்லது கெமிக்கல் கொண்டு துடைப்பது:
தண்ணீரைவிட ஆல்கஹால் அல்லது சானிடைசர் வேகமாக ஆவியாகும் என்றாலும், அவை ஸ்கிரீனை முழுமையாகக் கெடுத்துவிடும்; மேலும், போனின் உள்ளே இருக்கும் பசைகளையும் உருகச் செய்துவிடும்.
'வாட்டர் ப்ரூஃப்' தானே என்று அலட்சியமாக இருப்பது:
இன்றைய நவீன போன்கள் IP67 அல்லது IP68 சான்றிதழ் பெற்ற வாட்டர் ப்ரூஃப் போன்களாக வருகின்றன. இதனால், போன் தண்ணீரில் நனைந்தவுடன் பலர் அதைத் துடைக்காமல் அப்படியே பயன்படுத்துகிறார்கள். ஆனால், மழைநீரில் இருக்கும் அமிலத்தன்மை மற்றும் உப்புத்தன்மை போன்ற காரணங்களால், போனின் ஸ்பீக்கர் கிரில்களை மெல்ல மெல்ல அரித்துவிடும்.
மைக்ரோவேவ் ஓவன் அல்லது வெயிலில் வைப்பது:
போனை உலர்த்துகிறேன் என்ற பெயரில் சிலர் மைக்ரோவேவ் ஓவனிலும், சுட்டெரிக்கும் நேரடி வெயிலிலும் பல மணி நேரம் காயவைக்கும் விபரீதங்களைச் செய்கிறார்கள். ஓவனில் வைத்தால் போன் அடுத்த நொடியே வெடித்துவிடும். வெயிலில் வைக்கும்போது, ஸ்மார்ட் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து உப்பிப்போகும் அல்லது நிரந்தரமாகச் செயலிழந்துவிடும்.
ஹேர் டிரையர் மூலம் காயவைப்பது:
ஹேர் டிரையரிலிருந்து வரும் கடுமையான வெப்பக் காற்று, ஸ்மார்ட் போனின் உள்ளே இருக்கும் மிகச்சிறிய எலக்ட்ரானிக் பாகங்களையும், கேமரா லென்ஸையும் உருக்கிவிடும். மேலும், அதன் வேகமான காற்று போனின் மேற்பகுதியில் இருக்கும் நீரை இன்னும் ஆழமாக உள்ளே தள்ளிவிடும்.
அரிசிப் பானைக்குள் புதைத்து வைப்பது:
இது பழைய பேசிக் மாடல் போன்களுக்குப் பொருந்தலாம்; ஆனால், இன்றைய நவீன ஸ்மார்ட் போன்களுக்குப் பொருந்தாது. அரிசியில் உள்ள மிகச்சிறிய துகள்கள், மாவுப்பொருள் மற்றும் தூசிகள் போனின் சார்ஜிங் போர்ட், ஸ்பீக்கர் துளைகள் மற்றும் ஹெட்ஃபோன் ஜாக்குள்ளே சென்று அடைத்துக்கொள்ளும்.
உடனடியாக சார்ஜ் செய்வது:
போன் நனைந்தவுடன் உடனடியாக அதனைச் சார்ஜரில் போடக்கூடாது. அப்படிச் செய்தால் மின்சாரம் பாய்ந்து போன் வெடிப்பதற்கோ அல்லது எலக்ட்ரானிக் பாகங்கள் முற்றிலும் சேதமடைவதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளன.
செய்ய வேண்டியவை:
சிம் கார்டு ட்ரேயை எடுப்பது:
போனை ஒரு சுத்தமான துணியால் துடைத்தவுடன், முதலில் சிம் கார்டு ட்ரேயை வெளியே எடுக்கவேண்டும். இது போனின் உள்ளே இருக்கும் காற்றழுத்தத்தைக் குறைத்து, உள்ளே இருக்கும் ஈரம் எளிதாக வெளியேற வழிவகை செய்யும்.
வேக்யூம் கிளீனர் பயன்படுத்துவது:
குறைந்த பவர் கொண்ட வேக்யூம் கிளீனரை போனின் துளைகளுக்கு அருகில் வைத்தால், உள்ளே இருக்கும் நீர்த்துளிகளை அது எளிதாக உறிஞ்சி எடுத்துவிடும்.
இயற்கையாக உலரவைப்பது:
ஒரு காட்டன் துணியின் மீது படுக்கை வசமாக போனை வைக்க வேண்டும். அதன் பிறகு மின்விசிறியைப் போட்டு, 24 மணி நேரம் அப்படியே விட்டுவிடுவதுதான் உள்ளே இருக்கும் தண்ணீரை உலர்த்துவதற்கான பாதுகாப்பான வழிமுறையாகும்.
உப்பு நீர் அல்லது சாக்கடை நீரில் விழுந்தால்:
ஒருவேளை போன் சாக்கடைத் தண்ணீரிலோ அல்லது கடல் உப்புத் தண்ணீரிலோ விழுந்துவிட்டால், உடனே போனை ஆஃப் செய்துவிட்டு, சுத்தமான நல்ல தண்ணீரால் மேற்பகுதியை மட்டும் லேசாக துடைக்க வேண்டும். இல்லையெனில், அதிலுள்ள உப்பும் அழுக்கும் போனின் உள்ளே இருக்கும் செம்புக் கம்பிகளை மெல்ல மெல்ல அரித்து, முற்றிலும் அழித்துவிடும்.