

என் உறவினர் வீட்டிற்கு சமீபத்தில் சென்றிருந்த பொழுது, அங்கு உள்ள அவர்களின் தோட்டத்தில் இருந்த ரம்பா செடியை காண்பித்து இது என்னவென்று தெரியுமா? என்று கேட்டு அவர்களே பதிலும் அளித்து அதிலிருந்து ஒருவகை உணவை படைத்து வழங்கினர். அவர்கள் செய்த ரெசிபி இதோ;
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் அனைத்தும் சேர்த்து நறுக்கியது- ஒரு கப்
பாஸ்மதி அரிசி -ஒரு கப்
தேங்காய் பால்-1கப்
தண்ணீர் -முக்கால் கப்
ரம்பா இலை சிறியதாக -4 துண்டுகள்
பச்சை மிளகாய் இரண்டு- கீறியது
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் நீளவாக்கில் அரிந்தது-1
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் வதக்கவும். பின்னர் காய்கறிகளை வதக்கி அரிசி சேர்த்து தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி ரம்பா இலையைச் சேர்த்து, உப்பு போட்டு மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். கம கம நெடியுடன் ரம்பா இலை சாதம் ரெடி. மிகவும் சிம்பிளான சாதம் இது. இதற்கு பிடித்தமான வகையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மற்றும் பிடித்த கிரேவியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
ரம்பா இலையில் இதமான நறுமணம் இருப்பதால் அதில் மற்ற வாசனை திரவியங்களை சேர்க்காமல் இருந்தால் நல்லது. மேலும் புதினா, தனியா, கருவேப்பிலை தாளித்தால் அவற்றுடனே சாதத்தை சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் ரம்பா இலையை தனியாக எடுத்துவிட்டுதான் சாப்பிட வேண்டும். அதை சேர்த்து சாப்பிட முடியாது. இந்த சாதம் ஜீரணத்தை மேம்படுத்தும். தக்காளி சாதம், புலாவ், பிரியாணி போன்ற எதை செய்தாலும் அதனுடன் ரம்பா இலையை சேர்த்து செய்யலாம்.
ரம்பை செடியை வளர்ப்பதற்கு மிதமான மண்,ஈரப்பதம் உள்ள குளிர்ச்சியான தரை அல்லது தொட்டி, நல்ல வெயில் உகந்தது .மேலும் இந்த ரம்பா இலையை காயவைத்து வீட்டின் ஓரங்களிலும் போட்டு வைத்திருக்கின்றனர். அது நல்ல நறுமணத்தை கொடுக்கிறது.
இது இளமையை தக்கவைக்கும் வாசனை பொருள். இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி நிரம்பி உள்ளது. இனி நீங்களும் சமையலுக்கு பயன்படுத்துவீர்கள்தானே!
இனிப்பு சேவு
செய்ய தேவையான பொருட்கள்:
சலித்த கடலை மாவு- ஒரு கப்
சலித்த அரிசி மாவு -அரை கப்
சீனி- ஒன்னரை கப்
நெய்- கால் கப்
நட்ஸ் பொடி -ஒரு ஸ்பூன்
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு- தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சி அதில் ஏலப்பொடியை போட்டு வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நட்ஸ் பொடி, உருக்கிய நெய்-இவற்றுடன் தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து மாவை கெட்டியாக வைத்துக்கொண்டு காராசேவு கட்டையில் மாவை தேய்த்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நீளமான சேவாக பொரிந்த அந்த காராசேவை பாகில் போட்டு, அடுப்பை நிறுத்தி ஜீரா நன்றாக கலக்கும்படி கிளறி அகலமான தட்டில் கொட்டி நன்றாக ஆறவிட்டு எடுத்து வைக்கவும். இனிப்பு சேவு ரெடி.
சேவை கையால் தேய்ப்பது சில சமயம் நன்றாக விழவில்லை என்றால் முறுக்கு அச்சில் பிழிந்து பொரித்தடுத்து ஜீராவில் போடலாம்.