
தக்காளியை ரசத்துக்கு அரிந்து போட்டால் வீணாக நேரிடலாம். மிக்ஸியின் வைப்பரில் தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு சுற்றுசுற்றி ரசம் செய்தால் மணமான, சுவையான ரசம் ரெடி.
ரசத்துக்கு கொத்துமல்லி இல்லையா? தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போடலாம். வாசனையாக இருக்கும்.
ரசம் வைத்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் போன்றவற்றை ரசத்தில் போட்டு மூடிவைத்து, சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் ரசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல், தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
ரசத்துக்கு புளி கரைக்கும்போது கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கரைத்தால் ரசம் தனி ருசியுடன் இருக்கும்.
அதுபோல் ரசத்தில் உப்பு அதிகமாகிவிட்டால், உருளைக் கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை அது உறிஞ்சிவிடும்.
மழைநாளில் ரசப்பொடிக்கு அரைக்கும்போது ஒரு ஸ்பூன் உப்பு போட்டு அரைத்தால் பூசணம் வராது. இந்த ரசப்பொடியை வைத்து ரசம் செய்யும்போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ரசம் தயாரிக்கும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால் ரசத்தின் சுவையே அலாதிதான்.
ரசம் கம கமவென்று மணக்க வேண்டுமா? ரசம் பரிமாறும்போது அதில் ஒன்றிரண்டு பன்னீர்த் துளிகளை விட்டு பரிமாறலாம்.
தேங்காய்த் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மேலும் சுவையாக இருக்கும்.
கொத்துமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நாட்களில், கொத்துமல்லித் தழையை உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்து, வடையாக தட்டி வெயிலில் காயவைத்து வடகமாக செய்து கொள்ளுங்கள். இந்த வடகத்தை ரசத்தில் போட்டால் ரசம் மிகவும் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
ரசப்பொடி சரியாக அமைய.., மூன்று பங்கு தனியா, ஒரு பங்கு மிளகு, ஒன்றரை பங்கு ஜீரகம், ஒரு பங்கு துவரம் பருப்பு, அரைப் பங்கு கடலை பருப்பு, விரளி மஞ்சள் மற்றும் மிளகாய் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளித் தண்ணீரில் உப்பு போட்டு நன்கு கொதி வந்த வுடன் பருப்பு சேர்த்து ரசப்பொடி இரண்டு ஸ்பூன் போட்டு, இரண்டு கொதி வந்தவுடன் தாளித்துக் கொட்டுங்கள். ரசம் வாசனை ஊரையே தூக்கும்.