வெறும் 15 நிமிடத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வகைகள்!

Rasam Varieties
Rasam Varieties
Published on

ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த ரசம் 16ஆம் நூற்றாண்டில் மதுரையில் கருணாஸ் என்ற சமையல் காரரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மன்னரின் மகன் நோய்வாய்ப்பட்டு எதையும் சாப்பிட முடியாமல் இருந்த நிலையில், இளவரசர் சாப்பிட விரும்பும் உணவை கொண்டு வருபவர்களுக்கு மன்னர் பரிசை அறிவித்தார். கருணாஸ் மன்னரின் மகனுக்காக ரசம் தயாரித்ததாக கூறப்படுகிறது.

ரசம் மக்களிடையே குறிப்பாக தமிழர்களிடையே மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. எளிமையாக இருந்த போதும் அது மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. காரணம் அதன் மணம், குணம், ருசி மற்றும் எளிதான செய்முறையே இதற்கு காரணம்.

ரசம் ஏன் ஆரோக்கியமானது? (Why is rasam healthy?)

ரசம் அதன் மூலப் பொருட்களான தக்காளி, பூண்டு, இஞ்சி, மஞ்சள், பிரண்டை, மிளகு, கடைசியாக சேர்த்து கரைத்து விடும் பருப்பு ஆகியவற்றால் ஊட்டச்சத்து மிக்கதாகவும், செரிமானத்திற்கு எளிதாகவும் இருக்கிறது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. மஞ்சள், இஞ்சி, மிளகு போன்ற மருத்துவ குணமிக்க பொருட்களால் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை எரிக்க உதவும் ஆன்டி ஆக்சிடெண்ட்களைக் கொண்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத போது இதனை 'சூப்' போல் அருந்தலாம். நறுமண மூலிகைகள் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, திப்பிலி, பிரண்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ரசம் சளி, உடல் வலி, வயிற்று வலி, தொண்டை கரகரப்பு போன்றவற்றிற்கு ஆறுதலான உணவாகும். மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் மிளகு ரசம், இஞ்சி ரசம் போன்றவற்றை சூப் போல் அருந்த மிகுந்த ஆரோக்கிய நன்மையை வழங்கும்.

பல்வேறு ரசம் வகைகள் (Rasam Varieties):

ரசத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. திப்பிலி ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், இஞ்சி ரசம், பிரண்டை ரசம், எலுமிச்சை ரசம், புதினா ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், மாங்காய் ரசம், முருங்கைக் காய் ரசம், தூதுவளை ரசம் என உள்ளன. ஒவ்வொரு ரச வகையும் அதன் தனித்துவமான பொருட்கள் மற்றும் தயாரிக்கப்படும் முறையால் வெவ்வேறு விதமான சுவைகளையும், மணத்தையும், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

ரசம் செய்வதற்கான எளிதான செய்முறைகள் (Easy recipes for making rasam):

மிளகு ரசம்:

புளிக்கரைசல் - 1 கப்

தக்காளி - 1

மிளகு - 1 ஸ்பூன்

மிளகாய் - 1

சீரகம் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையானது

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிது

தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை, நெய்

வாணலியில் மிளகு, மிளகாய், சீரகம், துவரம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொரகொரப்பாக அரைத்து வைத்த விழுதை ரெண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து புளித்தண்ணீரில் விட்டு மொச்சு வந்ததும் இறக்கவும். கொதிக்க விட வேண்டாம். 1 ஸ்பூன் நெய்யில் கடுகு, கருவேப்பிலை, சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டி பெருங்காயத்தூள் சேர்த்து மூடவும். ருசியான மிளகு ரசம் தயார்.

சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை தடுக்கும் மருத்துவ குணம் நிறைந்த ரசம் இது.

எலுமிச்சை ரசம்:

எலுமிச்சம் பழம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையானது

பெருங்காயத்தூள் - சிறிது

வெந்த துவரம் பருப்பு - 1/4 கப்

தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை, நெய்

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தோல் நீக்கி நசுக்கிய அல்லது துருவிய இஞ்சி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பருப்பை ரெண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து விடவும். நெய்யில் கடுகு, சீரகம் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டி பெருங்காயத்தூள் சேர்த்து விடவும். சிறிது ஆறியதும் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதன் சாறை விடவும். மணக்க மணக்க சிம்பிளான எலுமிச்சை ரசம் தயார்.

செரிமானத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த கை மருந்தாக செயல்படும்.

மாவிலை ரசம்:

எல்லாரசங்களையும் போலத்தான் இதுவும். ஆனால் இளம் மாவிலை துளிர்களை பறித்து நன்கு கழுவி தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மிளகு, சீரகப்பொடி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கடைசியாக நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட மாவிலை ரசம் தயார்.

இது காய்ச்சல், சளி போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவும். மென்மையான புளிப்பு, காரம் கொண்டு வயிற்றுக்கு இதம் தரும் ரசம் இது.

இதையும் படியுங்கள்:
நச்சென்று நாலு வகை ரசம்!
Rasam Varieties

ரசம் சுவையாக இருக்க சில ரகசியங்கள் (Some secrets for a tasty rasam):

  • ரசத்தின் சுவையைக் கூட்ட முக்கிய பங்கு அதன் தாளிப்பில் உள்ளது. எந்த ரசம் செய்தாலும் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட ருசியாக இருக்கும்.

  • சிலர் ரசத்திற்கு சாம்பார் பொடி சேர்ப்பார்கள். அது அவ்வளவாக ருசிக்காது. ரசத்திற்கென்றே தனியா, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வரலி மஞ்சள் தட்டி சேர்த்து தயாரிக்கப்படும் ரசப்பொடி மணம், குணம் நிறைந்ததாக இருக்கும்.

  • ரசத்துக்கு புளியின் அளவு மிகவும் முக்கியம். புளியை அதிகமாகவோ, குறைவாகவோ சேர்க்கக்கூடாது. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் ரசத்தில் ருசி கூடும்.

  • ரசத்தை பருப்பு கரைத்து விட்ட பிறகு கொதிக்க விடக்கூடாது. மொச்சுப் பதத்தில் இறக்க வேண்டும்.

  • ரசத்தை இறக்கியதும் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது, சர்க்கரை அரை ஸ்பூன் அல்லது ஒரு சிறு வெல்லக் கட்டி சேர்க்க ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மருந்தாகும் தும்பை பூ துவையல், தும்பைப் பூ ரசம்!
Rasam Varieties
  • பூண்டு ரசத்திற்கு பூண்டை பச்சையாக நசுக்கி சேர்க்காமல் நெய்யில் சிறிது வதக்கி சேர்க்க மணக்கும்.

  • ரசம் கொதிக்கும் பொழுது சிறிது புதினா இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து கொதிக்க விட ரசம் மணமாக இருக்கும்.

  • புளிப்பு சுவைக்கு பெரும்பாலும் புளி அல்லது தக்காளியைத் தான் சேர்ப்போம். இவற்றிற்கு பதில் மாங்காயை தோல் நீக்கி சதைப்பகுதியை பயன்படுத்த கூடுதல் மணமும் சுவையும் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com