சத்தும் உண்டு, சுவையும் உண்டு... ஆஹா! ஓஹோ! அடைகள் 4

Adai types
Adai types
Published on

விதவிதமாய் பருப்பு, தானியங்கள் கொண்டு செய்யப்படும் சத்துக்கள் நிறைந்த அடைகளை காலை அல்லது மாலை நேர உணவாக சாப்பிடலாம். புரதங்களும் விட்டமின்களும் நிறைந்த அடை வகைகளில் சிலவற்றை பார்ப்போம்.

1) காரப்பருப்பு அடை:

இட்லி அரிசி - 1 கப்

பச்சரிசி - 1/4 கப்

கடலை பருப்பு - 1/2 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

பயத்தம் பருப்பு - 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் - 6

பச்சை மிளகாய் - 2

உப்பு தேவையானது

கறிவேப்பிலை சிறிது

தேங்காய் துருவல் -1/4 கப்

அரிசியுடன் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும். உப்பு, மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கறிவேப்பிலையை கிள்ளி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு தடிமனான அடைகளாக தட்டி எடுக்க மிகவும் சுவையாக இருக்கும்.

2) கம்பு அடை:

கம்பு மாவு ஒரு கப்

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் - 4

முருங்கை இலை - 1 கைப்பிடி

இஞ்சி சிறு துண்டு

உப்பு தேவையானது

கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு சேர்க்கவும். ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கை இலை, இஞ்சித் துண்டு, மிளகாய் மூன்றையும் சேர்த்து சிறு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்ததை கம்பு மாவுடன் கலந்து கையால் தட்டும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் கலந்து பிசையவும்.

தோசைக்கல்லை சூடு செய்து எண்ணெய் தடவி, மாவை கையில் பெரிய உருண்டையாக எடுத்து சிறிதளவு தண்ணீர் தொட்டு கையால் சிறிது தடிமனான அடையாக தட்டவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விடவும். திருப்பி போட்டு பொன் கலரில் வந்ததும் எடுக்க மிகவும் ருசியான மற்றும் சத்தான கம்பு அடை தயார்.

வெண்ணெய், வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

3) கேழ்வரகு கார அடை:

கேழ்வரகு - 2 கப்

பச்சரிசி - 1/2 கப்

உளுந்து - 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 6

உப்பு தேவையானது

வெங்காயம் - 1

கறிவேப்பிலை சிறிது

கொத்தமல்லி சிறிது

கேழ்வரகு, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற விடவும். பிறகு உப்பு, மிளகாய், வற்றல் சேர்த்து அரைத்தெடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி தூவி சிறிது தடிமனான அடையாக வார்த்தெடுக்க சத்தான ருசியான அடை தயார்.

அரைத்த மாவை உடனடியாகவும் வார்க்கலாம். மூன்று மணி நேரம் கழித்தும் வார்க்கலாம்.

4) கேழ்வரகு இனிப்பு அடை:

கேழ்வரகு மாவு - 1 கப்

நாட்டு சர்க்கரை - 1/2 கப்

தேங்காய்த் துருவல் - 1/4 கப்

ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்

அடுப்பில் வாணலியை வைத்து மூன்று கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய்த் துருவல் கலந்து கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக தூவிக் கிளறவும். நன்கு கிளறியதும் அடுப்பை அணைத்து விட்டு சிறிது ஆறியதும் பெரிய எலுமிச்சையளவு மாவை எடுத்து வாழை இலையில் தட்டியோ அல்லது நேரடியாக தோசை கல்லில் தட்டியோ இருபுறமும் எண்ணெய் விட்டு வார்த்தெடுக்கவும்.

அடைக்கு வெல்லம், வெண்ணெய், அவியல், தேங்காய் சட்னி போன்றவை மிகவும் பொருத்தமான ஜோடியாகும்.

இதையும் படியுங்கள்:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா காண வாரீர்!
Adai types

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com