கும்மாயம் - ஆடிப்பெருக்கன்று நகரத்தார் விருந்துகளில் முக்கிய இடம் பெறும். இது மிதமான இனிப்புடன் சுவை மிகுந்தது. தொண்டைக்கு இரங்கும் இதமான ஒரு அற்புத இனிப்பு வகை. இதன் மூலப்பொருள் உளுந்து, கருப்பட்டி ,நெய். நம் முன்னோர்கள் தந்து சென்ற அதிசய மருத்துவ குணம் நிறைந்த உணவு இது. இரும்புச் சத்தும் புரதச்சத்தும் நிறைந்தது. பூப்படைந்த குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுப்பார்கள்.
கும்மாயம்
தேவையானது:
உளுந்து- 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பச்சரிசி - 1/4 கப்
இவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
செய்ய தேவையானது:
கும்மாய மாவு -ஒரு கப்
கருப்பட்டி -அரை கப்
வெல்லம் - அரை கப்
தண்ணீர் - 4 கப்
நெய் -கால் கப்
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மாவை 3 நிமிடம் வரை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். வறுத்தமாவை ஆறவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டி, வெல்லம் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும் கரைத்த பாகை வடிகட்டி ஆறியதும் வறுத்தமாவையும் மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து கையால் கட்டி இல்லாமல் கரைக்கவும். பின்பு அடுப்பில் வைத்து கைவிடாமல் கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கிளறவும்.
கும்மாயம் நன்கு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயத்தில் மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி கீழே இறக்கவும். சுவையான சத்தான கும்மாயம் ரெடி. இரண்டு மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனை ஆடிப் பெருக்கு அன்று படைத்து சாப்பிடலாம்.
காப்பரிசி:
ஆடிப்பெருக்கன்று பாரம்பரியமாக செய்யப்படுவது காப்பரிசி. இது பச்சரிசி, கருப்பு எள், பொறிகடலை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு ஆகும். இது ஆடிப்பெருக்கு நாளில் இறைவனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
தேவையானது:
பச்சரிசி - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
பொட்டுக்கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்.
கருப்பு எள் - 2 டீஸ்பூன்
ஏலத்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய் பல்லாக கீறியது - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை கழுவி நிழலில் உலர்த்தி வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். நெய்யில் தேங்காய் பல்லை வறுத்து எடுக்கவும். பொட்டுக்கடலை ஏலத்தூள் அனைத்தும் சேர்த்து பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும்.
வெல்லத்தை நீர் சேர்த்து சூடாக்கி வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து உருட்டும் பதம் வந்ததும் அதில் அரிசி கலவை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆடிப்பெருக்கு அன்று இந்தக் காப்பரிசியை படைக்கலாம்.