
நடுத்தர மக்களின் வாழ்க்கைப் பாடு பெரும்பாலும் திண்டாட்டம்தான். ஒருவரின் செலவு, சேமிப்பு என்பது அவரது வருவாய், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது. அந்த வகையில் நடுத்தர வர்க்கத்தினர் செலவைக் குறைத்து சேமிப்பில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சூப்பர் மார்கெட்டுகளுக்கு ‘நோ’: ஒரு மாதத்தின் இன்றியமையாத தேவையான மளிகைப் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதை விட, கடைகளில் வாங்குவது சிறந்தது. ஏனெனில், சூப்பர் மார்க்கெட்டில் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து ஏராளமான பொருட்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் நமக்கு தேவையில்லாத பொருட்களை, தேவையில்லாத அளவுகளில் வாங்க நேரிடும் என்பதால் கூடுதல் செலவு ஏற்படும். இதனைத் தவிர்க்க மொத்தமாக விற்பனை செய்யும் சில்லறை கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு சற்றே குறையும்.
மொத்தமாக வாங்குவது நல்லது: சில்லறை செலவுகள் பட்ஜெட்டில் துண்டு விழ மிக முக்கியக் காரணங்களாக இருப்பதால் ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஆராய்ந்து பட்டியலிட்டு மொத்தமாக ஒரே முறை வாங்குவதால் அநாவசியமான சில்லறை செலவுகளைத் தவிர்க்க முடியும்.
கூகுள் பே, போன் பே வேண்டாமே: கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கும் இடங்களில் எல்லாம் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து பணத்தை செலவிடுவதால் வரைமுறையின்றி வருமானம் கரைந்து போக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, கையில் பணத்தை வைத்து இருந்தால் மட்டுமே அதனை உணர்ந்து பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிட முடியும் என்பதால் பெரும்பாலும் கூகுள் பே, போன் பேவை தவிர்ப்பது சேமிப்பிற்கு உதவும்.
முதலில் சேமிப்பாக இருக்கட்டும்: ஒவ்வொரு மாத சம்பளத்திலும் சேமிப்பு போகத்தான், செலவு என்று இருக்க வேண்டும். மாதக் கடைசி வரட்டும் ஏதேனும் மிச்சம் இருந்தால் சேமிப்பாக மாற்றிக் கொள்ளலாம் என்பது மிகப்பெரிய தவறாகும். ஏனெனில், ஒவ்வொரு ரூபாய்க்கும் செலவு இருக்கும் என்பதால் முதலில் சேமிப்பிற்கான பணத்தை ஒதுக்கி வைத்த பிறகே செலவு செய்ய கணக்குகளை தொடங்க வேண்டும்.
சோஷியல் மீடியாக்களுக்கு ‘நோ’: இன்றைய நவீன உலகில் தவிர்க்க முடியாமல் இருக்கும் சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை பார்த்து ஆடைகள், உணவுகள் உள்ளிட்டவற்றிற்கு பணத்தை செலவழிப்பது அதிகரித்துள்ளது. ஆனால், நாம் அவற்றைப் பார்த்து வாங்கும் பொருட்கள் நம்முடைய வாழ்க்கைக்குப் பெரும்பாலும் அவசியமில்லாததாக இருப்பதால் சமூக வலைத்தளங்களை தவிர்த்தால் பணத்தை முறையாக சேமிக்க முடியும்.
நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை முறையாக சேமித்து, தேவைக்கு செலவு செய்து வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.