
ஃப்ரெட் - மில்க் ஸ்பெஷல் கேக் (without oven)
தேவை:
ஃப்ரெட் 5 ஸ்லைஸஸ்
ஜீனி கால் கப்
நல்ல பால் ஒரு கப்
பால் பவுடர் கால் கப்
முந்திரி-பாதாம் கால் கப்
(நன்கு பொடித்தது)
ஏலப்பொடி கால் டீஸ்பூன்
நல்ல நெய் 2 டீ ஸ்பூன்
தண்ணீர் சிறிது
செய்முறை:
முதலில் ஃப்ரெட்டை துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு திரித்தெடுத்து ஒரு வாயகன்ற ஃபௌலில் போடவும்.
ஒரு பானில் சிறிது தண்ணீர்விட்டு, ஜீனியைப் போட்டு கிண்டி கேரமல் செய்து கொள்ளவும். இத்துடன் ஒரு கப் பால் சேர்த்து கலக்கவும். பின்னர், கால் கப் பால் பவுடர், ஏலக்காய்ப் பொடி, நைஸாக பொடித்து வைத்திருக்கும் முந்திரி-பாதாம் பொடிகளைப்போட்டு எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் செய்யவும். பானிலிருந்து சுருண்டு வருகையில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிண்டி இறக்கி நெய் தடவிய செவ்வக வடிவ பாத்திரத்தில் கொட்டி சமமாக்கவும்.
நன்றாக ஆறிய பிறகு, துண்டுகளாக கட் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். ஃப்ரெட்டில் செய்தது என்று தெரியவே தெரியாது. Oven - ம் தேவையில்லை.
அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டேஸ்ட்டி கேரளா டைப் அவியல்
தேவை:
வாழைக்காய் 2
அவரைக்காய் 100 gms
பீன்ஸ் 100 gms
உருளைக் கிழங்கு 2
கத்தரிக்காய் 4
கேரட் 2
பச்சை மிளகாய் 6
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீ ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
நல்ல தயிர் 1 கப்
தேங்காயெண்ணெய் 3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி 1 சிட்டிகை
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு, வாழைக்காய், கேரட் மூன்றையும் அலம்பி, தோல் சீவி நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளையும் சுத்தம் செய்து நீள வாக்கில் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
தேங்காய் துருவல், சீரகம்,பச்சை மிளகாய் போன்றவைகளை மிக்ஸியிலிட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய காய்கறிகள், சிறிது மஞ்சள்பொடி, தேவையான உப்பு ஆகியவைகளைப் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு, சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை, வெந்த காய்கறிகளுடன் சேர்த்து மெதுவாக கிண்டவும்.
இரும்புக்குழி கரண்டியில் 2 டீஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலையைத் தாளித்து காய்கறி கலவையில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் சென்றபின், தயிரை விட்டு நன்கு மிக்ஸ் செய்து இறக்கிய பிறகு, மீதி 1 டீஸ்பூன் தேங்காயெண்ணையை பரவலாக மேலே விடவும்.
சாப்பாட்டு இலையில் பரிமாறுகையில், கம-கமவென அவியல் வாசம் மூக்கைத் துளைக்கும்.
சாதம், அடை மற்றும் சப்பாத்திக்கும் ஏற்றது இந்த டேஸ்ட்டி கேரளா டைப் அவியல்.