
1) புளி மிளகாய் தொக்கு:
தேவையானவை:
பச்சை மிளகாய் கால்கிலோ
புளி சுத்தமானது 150கிராம்
பேட்டை வெல்லம் 150கிராம்
நல்லெண்ணெய் 200மிலி
காயப் பவுடர் 2டீஸ் பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலம்பி உலர்ந்தவுடன் அடுப்பில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நன்கு வதக்கி, சூடு ஆறியபின் , புளி,உப்பு, வதக்கிய மிளகாய், வெல்லத்தூள், இவைகளை மிக்சியில் தண்ணீா் கலக்காமல் விழுதாய் அரைத்துக்கொள்ளவும்.
பின்னா் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த விழுதுகளை கைபடாமல் போட்டு காயத்தூள் கலந்து கைவிடாமல் கிளறவும். நன்கு கொதி வந்து சுருள் நீங்கும்போது எண்ணெய் பிாிந்து விழுது போல ஆகிவிடும்.
இதை ஒரு பாட்டிலில், அல்லது ஜாடியில் வைத்துக்கொள்ளலாம். தண்ணீா் படாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும். தோசை, சப்பாத்தி, இட்லி, உப்புமா, தயிா்சாதம் லெமன் ரைஸ் இப்படி அனைத்து உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம். ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது. மிகவும் டேஸ்டாக இருக்கும்.
2) புழுங்கல் அரிசி தேங்காய் வெல்லம் போட்ட பால் கொழுக்கட்டை:
தேவையானவை
புழுங்கல் அாிசி - ஒரு கப்
முற்றிய தேங்காய்த்துருவல் இரண்டு கப்
பேட்டை வெல்லம் 350கிராம்,
ஏலக்காய் பொடி கொஞ்சம்
செய்முறை
புழுங்கல் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து களைந்து வடிக்கட்டி அதனுடன் தேங்காய் துருவலை சோ்த்து நைசாய் கெட்டியாய் மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஆறு டம்ளா் தண்ணீா் ஊற்றி அதில் வெல்லத்தைப் போட்டு கரைந்து கொதி நிலை வந்ததும் முறுக்கு அச்சில் மாவைப்போட்டு புழியவும். கிளறக்கூடாது.
பத்து நிமிடம் வெந்ததும் ஏலக்காய் பொடி போட்டு லேசாக கிளறி இறக்கிவிடலாம். சிலர் விருப்பப்பட்டால் வெல்லத்திற்கு பதில் சீனி (சர்க்கரை) போட்டு சிறு சிறு உருண்டையாகவும் போடலாம்.