ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்பெஷல் சாம்பார் !

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்பெஷல் சாம்பார் !

வீட்டில் தினமும் தான் சாம்பார் வைக்குறோம் . இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா? அப்ப கட்டாயம் இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்பெஷல் சம்பாரை முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க? இதை ஒரு முறை செய்தால் இனி ஹோட்டல் பக்கமே போக மாட்டீங்க ...

அந்த ஸ்பெஷல் சாம்பார் எப்படி செய்வது ?

அரைத்தெடுக்க:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி சிறிது கடுகு போட்டு அதுபொரிந்த பின் ஒரு சிட்டிகை வெந்தயம், 5 காய்ந்த மிளகாய், கலருக்காக 2 காஷ்மீர்மிளகாய், 1 ஸ்பூன் உளுந்து, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, மூன்றரை ஸ்பூன் மல்லி, மற்றும் இரண்டு ஸ்பூன் டெஸிகேட்டட் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மணம் வரும் வரை வதக்கவும். பின்னர் கொஞ்சம் மஞ்சள் தூள், இந்த மசாலாவிற்கு தேவையான உப்பு, ஒரு சிட்டிகை கட்டிப்பெருங்காயம் போட்டு கொஞ்சம் கொறகொறப்பாகஅரைக்கவும்.

அரைக்க:

பின்பு நறுக்கிய 2 தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், சிறு எலுமிச்சை அளவு வெல்லத்தை சேர்த்து இவற்றை தனியாக அரைத்து வைக்கவும்.

வேக வைக்க;

சின்னவெங்காயம் உரித்து இரண்டாகவும் முருங்கை மற்றும் கேரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தனித் தனியே வேக வைக்கவும்.

சிவப்புப் பூசணி ஒரு கப் அளவிற்கு மெல்லிசாக நறுக்கி தனியாக நன்றாக குழையும் அளவிற்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூசணி வெந்ததும் அதில் நன்றாக தண்ணீர் விட்டு குழைக்கவும். அதோடு கொஞ்சமாக துவரம்பருப்பு, பயித்தம் பருப்பை நன்றாக குக்கரில் குழைய வேக வைத்து நன்கு ஸ்மாஷ் செய்து சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அது சூடானதும் ஒரு சிட்டிகை வெந்தயம், கடுகு, பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அடுத்து தோலுரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

ஒரு நெல்லிக்காயளவு புளியைக் கரைத்து தேவையான அளவு நீர் விட்டு வெங்காயத்தை கொதிக்க விடவும்.

ஒரே ஒரு தக்காளியை நான்கு துண்டுகளாக்கி போடவும்

இது கொதி வந்தவுடன் தக்காளி, வெங்காயம், வெல்லம் அரைத்த விழுதைப் போடவும்.

இப்போது தேவைக்கு ஏற்ப நீரின் அளவைக் கூட்டவும்.

இத்துடன் மசாலாவைக் கலக்கிகொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன் கலந்து வைத்த பருப்பு, பூசணி விழுதைப்போட்டு கொதிக்க விடவும்.

இப்போது தேவையான உப்பு, மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும் இத்துடன் வெந்த முருங்கையை அந்த நீரோடு சேர்த்து ஊற்றி வெந்த கேரட்டையும் போடவும்.

இது நன்கு கொதித்த பின்பு சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தழைகளை போட்டால் வாசனை அபாரமாக இருக்கும்..

இந்த சாம்பார் சற்று நீர்த்தே இருக்கும் பிறகு கெட்டியாகிவிடும்.

ஒரு ஸ்பூன் நெய்யில் கறிவேப்பிலை, கொஞ்சம் சீரகம் பெருங்காயம் மட்டும் போட்டு தாளிக்கவும்.

இந்த சாம்பார் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா , மெதுவடை என அனைத்திற்கும் பிரமாதமாக இருக்கும் அபாரமான சுவையுடன்... !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com