

நாம் சாப்பிடுவதற்கு பெரிய ஹோட்டல்களுக்கு போனால், அங்கே கிடைக்கும் பரோட்டாவும் குருமாவும் ரொம்ப டேஸ்டாக இருக்கும். ஆனால் அதைவிட சுவையாக இருப்பது நம்ம தள்ளுவண்டி கடையில் கிடைக்கும் சால்னாதான்.
“அக்கா, இன்னும் கொஞ்சம் சால்னா கொடுங்க!” என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அந்த அனுபவத்துக்கு சமம் எதுவும் இல்லை. அந்த அளவுக்கு ருசி நிறைந்திருக்கும் அந்த சால்னா! அந்த சால்னாவும் சூடான பரோட்டாவும் சேரும்போது அது ஒரு செம்ம காம்பினேஷன். அந்த same ருசியை நாம வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
எம்டி சால்னா (EMPTY SALNA)
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 6 No
பெரிய வெங்காயம் – 2 No
நன்றாக பழுத்த தக்காளி – 2 No
பச்சை மிளகாய் – 3 No
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சோம்பு – அரை ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 No
கிராம்பு – 2 No
பிரிஞ்சி இலை – 1 No
தேங்காய் துருவல் – ஒரு கப்
முந்திரி – 10 No
ஏலக்காய் – 2 No
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி, சோம்பு, நெய் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதனுடன் பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி 3 விசில் விடவும்.
இறுதியாக குக்கரைத் திறந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
விருப்பப்பட்டால் ஏதேனும் காய்கறி அல்லது அசைவ உணவை சேர்த்துக்கொள்ளலாம்.
தக்காளி பஜ்ஜி (Tomato Bajji)
தேவையான பொருள்கள்:
நன்றாக பழுத்த தக்காளி – 4 No
பெரிய வெங்காயம் – 2 No
பச்சை மிளகாய் – 4 No
உரித்த பூண்டு 10 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு: சிறிது கடுகு உளுந்து கால் ஸ்பூன் சீரகம்
செய்முறை:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்னர் சீரகம் சேர்க்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டை சேர்த்து வதக்கி பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்க்கவும். உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விடவும். குக்கரைத்திறந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்
கடலை சட்னி
தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை – அரை கப்
நிலக்கடலை – கால் கப்
வரமிளகாய் – 2 No
பச்சை மிளகாய் – 1 No
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு தேவையான அளவு
சின்ன வெங்காயம் 4 No
சீரகம் ஒரு ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து, மேலே கூறிய பொருள்களை லேசாக வதக்கவும். பிறகு ஆறவிட்டு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
தாளிக்க:
எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்.