
பொதுவாக திருமண நிகழ்ச்சியின் இரவு நேரங்களிலும், மற்ற இரவு நேர பார்ட்டிகளிலும் ரூமாலி ரொட்டி கட்டாயம் இருக்கும். மெல்லிய துணியை மடித்து வைத்ததை போல இருக்கும் ரூமாலி ரொட்டியின் சுவை அற்புதமானது. இதற்கு மந்தா ரொட்டி என்ற பெயரும் உண்டு. ரூமாலி ரொட்டிக்கு பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. ரூமால் என்றால் பெர்சிய மொழியில் கைக்குட்டை என்று பொருள் தரும். கைக்குட்டை போன்றே மெல்லியதாக மடித்து வைக்கப்பட்டதைபோல இருப்பதால் இந்த பெயர் வந்தது. பஞ்சாபில் இதன் பெயர் லம்பூ ரொட்டி, அங்கு சற்று பெரியதாக தயாரிக்கப்படுவதால் பெயர் மாறியுள்ளது.
ரூமாலி ரொட்டி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின் ஒரு தனி கதை உண்டு. முகலாய அரசர்களின் சமையல் கூடங்களில் இது உருவானது. சுல்தான் குடும்பத்தினர் சாப்பிடும் உணவில் அதிகப்படியான எண்ணையை உறிஞ்ச மெல்லிய துணி போன்ற ஒரு ரொட்டியை தயாரித்தனர். ஆரம்பகாலத்தில் இந்த ரொட்டியை மற்ற உணவுகளில் மேலே உள்ள எண்ணெய்யை உறிஞ்ச மட்டுமே பயன்படுத்தினர். பின்னர் எதேச்சையாக உண்டு, இதன் சுவை பிடித்து போய் இதை அரச உணவுப் பொருளாக பழக்கப்படுத்திக் கொண்டனர்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1 கப்
பால் - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கோதுமை மாவையும், மைதா மாவையும் சேர்த்து நன்கு சலித்துக்கொள்ளவும் .சலித்த மாவை ஒரு அகண்ட பாத்திரத்தில் இட்டு தேவைக்கு ஏற்ப உப்பை தூவி, எண்ணெய் விட்டு பிசையவும். சிறிது சிறிதாக பாலை மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும், தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை ரொம்பவும் கெட்டியாக பிசையாமல் கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்க வேண்டும்.
ஒருமணி நேரம் கழித்து மாவை எலுமிச்சை பழ அளவில் சிறிது சிறிதாக உருண்டையாக உருட்டி வைக்கவும். உருட்டிய மாவின் மீது சிறிது கோதுமை மாவை தூவி மெல்லிய ரொட்டியாக வார்த்து எடுக்கவும். ஒரு அகன்ற கடாயை மேல்புறம் நன்கு துடைத்துவிட்டு அடுப்பில் கவிழ்த்து வைக்கவும். கடாயின் குவிந்த மேல்புறத்தில் ரொட்டி இட்டு எடுக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேல்புறம் சூடானதும் ரூமாலி ரொட்டியை அதன் மேல் போட்டு எடுக்கவும்.
சிறிது குமிழ்கள் வரத் துவங்கும்போதே ரொட்டியை எடுத்து விடவும். ஒரு நொடி ரொட்டியை கடாயில் திருப்பி போட்டு விட்டு எடுத்துவிடவும். மெல்லிய ரொட்டி என்பதால் கவனமாக இருக்கவும். அதிக சூடு ஏறினால் தீய்ந்து போகும். எடுத்த ரொட்டியை கை குட்டையை மடிப்பதுபோல நான்காகவும், முக்கோணமாகவும் மடித்து பரிமாறவும். இந்த ரூமாலி ரொட்டிக்கு பன்னீர் பட்டர் மசாலாதான் சிறந்த காம்பினேஷன். மட்டர் பனீர், பாலக் பனீர், சன்னா மசாலா, பன்னீர் மஞ்சூரியன் உடன் சாப்பிட சிறப்பாக இருக்கும்.