
கம்பு இட்லி
தேவை:
கம்பு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3 கப்
புழுங்கல் அரிசி - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கம்பு, புழுங்கல் அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வையுங்கள். கம்பை நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.
உளுத்தம் பருப்பை தண்ணீர் தெளித்து நைசாக அரைத்து, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். பின்னர் புழுங்கல் அரிசியை நைசாக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கம்பு, உளுந்து மாவுடன் கலந்து வைக்கவும்.
சற்று புளித்ததும், இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். கம கம கம்பு இட்லி தயார்.
கம்பு சப்பாத்தி
கம்பு மாவு - 2 கப் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஒவ்வொரு சப்பாத்திகளையும் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துவைத்தால், சூப்பரான கம்பு ஆலு சப்பாத்தி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
கம்பு லட்டு
தேவை:
கம்பு மாவு - ஒரு கப்,
வெல்லம் - 2 கப்,
முந்திரி - ஒரு கைப்பிடி அளவு,
பாசிப்பருப்பு - அரை கப்,
நெய் - தேவையான அளவு,
உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுத்தெடுக்கவும். பிறகு அதே நெய்யில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து வைக்கவும்.
ஒரு மிக்ஸியில் ஆறிய பாசிப்பருப்புடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து, கம்பு மாவு, துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி, ஒரு தட்டில் கொட்டிவைக்கவும்.
இதில் சிறிது உருக்கிய நெய்விட்டு, லட்டுகளாகப் பிடித்தால் சுவையான, சத்தான கம்பு லட்டு தயார்.
கம்பு ராகி கஞ்சி
தேவை:
ராகி மாவு - ஒரு கப்,
கம்பு மாவு - அரை கப்,
அரிசி குருணை - அரை கப்,
சின்ன வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்,
கடைந்த தயிர் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
ராகி மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும். அரை கப் அரிசி குருணையில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். அரிசி வெந்ததும், அதில் புளிக்க வைத்த ராகி மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அனைத்தும் வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான கம்பு - ராகி கஞ்சி ரெடி.