
ஆரஞ்சுத் தோல்களை நறுக்கி அவற்றை வற்றல் குழம்பு தாளித்துக்கொதிக்கும்போது மூன்று, நான்கு துண்டுகள் போட்டு கொதிக்க விடவும். வற்றல் குழம்பு தனிச்சுவையுடன் இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது மாங்காயைத் துருவிச் சேர்த்தால்சுவை வித்தியாசமாக இருக்கும்.
உளுந்துவடை மொறு மொறுப்பாகவும், உப்பலாகவும் இருக்க, உளுந்து ஊறவைக்கும்போது, அதனுடன் ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டீஸ்பூன் பச்சரிசியையும் ஊறவைக்கவும். இந்த வடை ஹோட்டல் வடைபோல சுவையாக இருக்கும்.
அப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய், வெல்லத்துடன், பத்து துண்டுகள் பைனாப்பிள் அரைத்துச் சேர்த்து அப்பம் செய்தால் மாறுதல் ருசியுடன் இருக்கும்.
உப்புமா செய்யும்போது கொஞ்சம் புளித்த தயிரைச் சேர்த்தால் உப்புமாவின் சுவையே அலாதிதான்.
வத்தக்குழம்பு, புளிக்காய்ச்சல் செய்யும்போது கொதித்த பின்னர் கொஞ்சம் வெல்லம் போட்டால் சுவை அதிகரிக்கும்.
வெள்ளைப் பூசணிக்காயை வெட்டி வைத்துவிட்டால் சீக்கிரம் அழுகிவிடும். வெட்டிய துண்டின் மேல் சிறிது உப்பைத் தடவி ஃ ப்ரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
ஒரு ஸ்பூன் சட்னியை ஒரு தட்டில் போட்டதும், அதிலிருந்து தண்ணீர் தனியே வரக்கூடாது. கெட்டியாக அப்படியே இருக்க வேண்டும். இதுவே சட்னியின் சரியான பதம்.
முருங்கை இலையைக் கொத்தாக எண்ணையில் பொரித்து, அத்துடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
வேகவைத்த கொண்டைக் கடலையுடன், வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு, சாட் மசாலா, உப்பு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்து செய்யும் சுண்டல் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டில் ஃ ப்ரிட்ஜ் இல்லாவிட்டால் வாய் அகன்ற மண் சட்டியில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்த நீரை ஊற்றி அதில் காய்கறிகளைப் போட்டு எடுங்கள். காய்கறிகள் வீணாகாது. அழுகியும் போகாது.
தினமும் ஃ ப்ளாஸ்க்கை பயன்படுத்துகிறவர்கள், அதில் சிறிதளவு வெந்நீரும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் கலந்து 15 நிமிடங்கள் வைத்திருந்து குலுக்கி அலம்பினால் சுத்தமாக இருப்பதுடன், எந்தவித துர்வாடையும் ஃப்ளாஸ்கிலிருந்து வராது.