
வாழைப்பூ மசியல்
தேவை:
வாழைப்பூ - ஒரு கப் (நறுக்கியது)
துவரம்பருப்பு - கால் கப்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
புளி - நெல்லிக்காய் அளவ
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வர மிளகாய் - 2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். பின் இந்த புளித் தண்ணீரில் உப்பு போட்டு, வாழைப்பூவை சேர்த்து வேக வைக்கவும். அதன்பின் துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். வாழைப்பூ வெந்தவுடன் அதில் வெந்த துவரம்பருப்பை சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிறிதளவு துவரம்பருப்பு, வர மிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து வாழைப்பூ கலவையில் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். சுவையான வாழைப்பூ மசியல் தயார்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட இது மிகவும் சுவையாக இருக்கும்.
**********
வாழைப்பூ துவையல்
தேவை:
வாழைப்பூ - 1 கப்
வர மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சுட்ட புளி - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்து ஒவ்வொரு பூக்களிலும் இருக்கும் நரம்பு பகுதியையும் சிறிதாக இருக்கும் தெளிவாகத் தெரிகின்ற தோல் பகுதியையும் ஆய்ந்து சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
நறுக்கியவற்றை நிறம் மாறாமல் இருக்க நீரில் போடவேண்டும். (வேண்டுமானால் சிறிது மோர் சேர்த்துக்கொள்ளலாம்).
அனைத்தையும் நறுக்கிய பின், நறுக்கிய பூக்களை நீரிலிருந்து எடுத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து உளுந்து, பெருங்காயம், வர மிளகாய் சேர்த்து உளுந்து பொன்னிறமாக வறுபட்ட பின் அதனுடன் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
வாழைப்பூ நன்கு வதங்கிய பின் அதனுடன் சுட்ட புளி, உப்பு சேர்க்கவும். இவற்றை ஆறவிடவும். ஆறியதும் அனைத்தையும் நன்கு அரைக்கவும். அவ்வளவு தான். சத்தான சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
இட்லி, தோசை போன்றவற்றுடன் உண்ண சிறந்தது.
*********
வாழைப்பூ வடகம்
தேவை:
வாழைப்பூ – 4 மடல்கள், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
வர மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பூவில் உள்ள நரம்புகளை நீக்கி, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் வர மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று கொர கொரப்பாக சுற்றவும். கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை சிறிய அடையாகத் தட்டி, வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் பொரித்து பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.
******
வாழைப்பூ அடை
தேவை:
வாழைப்பூ - 1
உளுத்தம் பருப்பு - கால் கப்
பச்சை பயறு - கால் கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
பெருங்காய பொடி - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்து, நரம்புகளை நீக்கி, நறுக்கிக் கொள்ளவும். அடுத்து உளுத்தம் பருப்பு, பச்சைப் பயறு, அரிசி சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். அடுத்து அதனுடன் வர மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து வாழைப்பூவுடன் அரைத்து வைத்துள்ள மாவு, உப்பு, பெருங்காயத் தூள், நீர் சேர்த்து கரைத்து எண்ணெய் ஊற்றி வார்த்து எடுத்தால், சுவையான, சத்தான வாழைப்பூ அடை தயார்.