
அடைமாவு குறைவாக இருந்தால் ஒரு டம்ளர் ரவையை ஊறவைத்து அடைமாவுடன் வார்த்து எடுங்கள். செய்யும் அடை புளிப்பின்றி, மெத்தென்று மிகுந்த சுவையுடன் இருக்கும்.
சப்பாத்தி செய்யும்போது, மீந்துபோன தேங்காய்த் துவையல், கொத்து மல்லித்துவையல் இவைகளை சப்பாத்தி மத்தியில் பரவலாக வைத்து, லேசாக அப்பளமாக இட்டு, கல்லில் போட்டு எண்ணைய் விட்டு செய்ய மாறுதலான சுவையுடன் சப்பாத்தி ரெடி.
எலுமிச்சம்பழ சாதத்துக்கு கொஞ்சம் கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, துருவிய தேங்காய் இவற்றை வறுத்துப் பொடி செய்து கலந்தால், மாறுதலான சுவையுடன் இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும்பொழுது, வெல்லம் அதிகமாகிவிட்டால், உடனே ஒரு டம்ளர் காய்ச்சிய பாலைவிட்டு அடுப்பில் வைத்துக்கிளறினால் சரியாகிவிடும்.
ஜூஸ் தயார் செய்யும்போது அது எந்த வகை ஜூஸ் ஆக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகிப்பாருங்கள். பல மடங்கு சுவையுடன் இருக்கும்.
இட்லி தோசைக்கு சட்னி அரைக்கும் போது வறுத்த நிலக்கடலை, புளி, கறிவேப்பிலை, பெருங்காயம் வைத்து அரைத்தால் சட்னியின் ருசியே அலாதிதான்.
வெள்ளரிக்காயை வாங்கி கறிக்கு நுறுக்குவது போல் நறுக்கி கடுகு,. சீரகம் தாளித்து சிறிது உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்த்தூள், வேண்டியவர்கள் கரம் மசாலாப்பொடி சேர்த்து எண்ணெயில் வதக்கி எடுத்தால் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெள்ளரிக்காய் டிஷ் ரெடி.
சிறிது உளுந்தை ஊறவைத்து கோதுமை மாவுடன் சேர்த்து தோசை வார்த்துப்பாருங்கள். கோதுமை தோசை மிகவும் சுவையாக இருக்கும்.
ஊறுகாய் எண்ணையை வீணாக்காமல், கடலைமாவு, கோதுமை மாவு, வேகவைத்த உருளைக்கிழங்கு இவற்றுடன் ருசிக்கேற்றபடி கலந்து, கெட்டியாக பிசைந்து சுவையான பரோட்டா செய்யலாம்.
பக்கோடா, வதக்கல் கறி செய்யும்பொழுது சிறிது ஆம்சூர் பொடி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சாதத்தில் கலந்து சாப்பிடும் உருளைக்கிழங்கு பொரியலுக்குத்தாளிக்கும்போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப்பொடி செய்து தாளித்தால் பொரியல் கமகமவென்று இருக்கும்.
மசால்வடை, பக்கோடா செய்யும்பொழுது சமையல் சோடாவைச் சேர்க்காமல், ஒரு மேஜைக்கரண்டி ரவையைக் கலந்து பாருங்கள்.
செய்யும் பட்சணங்கள் சூடு ஆறிய பின்பும் மொறமொறவென்று இருக்கும்.