
சுரைக்காய் இனிப்பு தோசை:
சுரைக்காய் துருவல் 1 கப்
கோதுமை ரவை 200 கிராம்
பச்சரிசி 1/4 கப்
வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 4
தேங்காய் துருவல் 1கப்
நெய் தேவையானது
கோதுமை ரவை அரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து அரைக்கவும். முக்கால்வாசி அரைந்ததும் தேங்காய் துருவல், தோல் நீக்கிய ஏலக்காய், வெல்லம் பொடித்தது சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். அதனை வாணலியில் சிறிது நெய் விட்டு நன்கு வதக்கி அரைத்த தோசை மாவுடன் கலந்து விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக வார்த்து சுற்றிலும் நெய் விட்டு திருப்பி போட்டு பொன்னிறமாக எடுக்கவும். மிகவும் ருசியான சுரைக்காய் இனிப்பு தோசை தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள பீர்க்கங்காய் துவையல் சூப்பராக இருக்கும்.
பீர்க்கங்காய் தோல் அடை:
பீர்க்கங்காயை கூட்டு, துவையல் செய்ய அதன் தோலை சீவி விட்டு பயன்படுத்துவோம். தோலை தூக்கி எறியாமல் துவையல், அடை என செய்து அசத்தலாம்.
பச்சரிசி 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 6
உப்பு தேவையானது
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
பீர்க்கங்காய் தோலைக்கழுவி சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து களைந்து தனியாக ஊற வைக்கவும். பருப்பு வகைகளை தனியாக களைந்து ஊற விடவும்.
இரண்டு மணிநேரம் கழித்து பருப்புகளை கொர கொரப்பாகவும், அரிசியை, வதக்கிய பீர்க்கங்காய் தோலுடன் மிளகாய் வற்றல் சேர்த்து நைசாகவும் அரைக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து உடனடியாக அடை வார்க்கலாம். மிகவும் ருசியான சத்தான பீர்க்கங்காய் தோல் அடை தயார்.
பீர்க்கங்காய் துவையல்:
பீர்க்கங்காய் 1
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
மிளகாய் 4
புளி நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். பீர்க்கங்காயையும் நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிது ஆறியதும் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும். மிகவும் ருசியான துவையல் தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். டிபன் ஐட்டங்களுக்கு தொட்டுக் கொள்ளவும் வைத்துக்கொள்ளலாம்.