
வெளியில் ஊர் பயணம் செல்ல வேண்டுமென்றால் பையில் இருந்து தேடுவோம். அவற்றை சரியாக அடிக்கி நிலையாக ஒரு இடத்தில் வைத்துவிட்டால் நிம்மதியாக பயணத்தை தொடரலாம். இதுபோல் முக்கியமான வீட்டு குறிப்புகள் சிலவற்றை இதில் காண்போம்.
குழந்தைகளுக்கு முதன் முதலாக சாலிட் உணவு கொடுக்கும் பொழுது வேகவைத்த அரிசி, பருப்பு, காய்கறிகளுடன் நெய், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொடுக்க வேண்டும். லேசான அரிசி பருப்பு பிசிறல் இருந்தாலும் சாப்பிடாமல் துப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் பொழுது தண்ணீரையும் சேர்த்து கொடுத்து விடவேண்டும். அப்படி கொடுப்பது அவர்களுக்கு வயிற்றில் கழிவுகள் வெளியேற உதவிபுரியும்.
விரலி மஞ்சள், பெருங்காயம், வெந்தயம் மூன்றையும் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டால் வயிற்றுப் பொருமல் உள்ள போது மோரில் கலந்து குடிக்கலாம் வயிற்றுப் பிரச்னை சரியாகும்.
பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு, மூட்டுகள் பலமடையும்.
ஆடாதோடை பொடி, தூதுவளை பொடி போன்றவற்றை வீட்டில் செய்து வைத்திருந்தால் மழைக்காலத்தில் வரும் சளி தொந்தரவுகளுக்கு இரண்டையும் சமஅளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நிவர்த்தி கிடைக்கும்.
வெந்தயத்தை முளைக்க வைத்து அரைத்து அதனுடன் இஞ்சித் துருவல், ரவை, வர மிளகாய் கலந்து வடை செய்து சாப்பிட்டால் நீரிழிவு மட்டுப்படும்.
காய்கறி கலவை பக்கோடா செய்யும்போது அதனுடன் வேர்க்கடலையும் சேர்த்து செய்து பாருங்கள் சுவையள்ளும்.
சோம்பு, கசகசா போன்றவற்றை வறுத்துக் கொண்டு அதனுடன் தலா இரண்டு முந்திரி, பாதாம் பருப்புகள் சிறிதளவு பொட்டுக்கடலை சேர்த்து தேங்காயுடன் அரைத்து குருமாவில் கலந்து செய்தால் எந்தவித குருமா ஆனாலும் ருசியாக இருக்கும்.
எள் துவையல் அரைக்கும்பொழுது அதனுடன் கைப்பிடி கருவேப்பிலையும் சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது இஞ்சி, பூண்டு, புளி சேர்த்து அரைத்தால் கமகம வாசனை உடன் நல்ல ருசியும் கிடைக்கும்.
தேங்காய், பருப்பு வகைகளை வறுத்து துவையல் செய்யும்பொழுது திப்பிலி இலைகள் அல்லது சாத்துக்குடி, நாரத்தை எலுமிச்சை இலைகள் போன்றவற்றில் ஏதாவது ஒரு வகை இலையை சேர்த்து அரைத்து துவையல் செய்யலாம்.
கிப்ட் பேக் செய்து வந்த கவர்களை எடுத்து வைத்துக்கொண்டால் சமயத்திற்கு மற்றவர்களுக்கு அதில் அழகாக மடித்து பயன்படுத்திக் கொடுக்க வசதியாக இருக்கும்.
பைகளை தரவாரியாக பிரித்து வைத்தால் ஊர் பயணங்களுக்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.
வாட்டர் பாட்டில் ,ஆயில் கேன், ஃபீடிங் பாட்டில் போன்றவற்றை சுத்தம் செய்ய தனி தனி பிரஷ்களை வாங்கி வைத்துக் கொண்டால் நிமிடத்தில் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.
தோட்டத்தில் விளைந்த பழ வகைகளை அடுத்தவர் களுக்கு கொடுக்கும் பொழுது முக்கால் திட்டம் பழமாக இருக்கும் பொழுதே கொடுத்து விடவேண்டும்.
மரக்கட்டைகளில் காய்கறி வெட்டுபவர்கள் அவற்றை நன்றாக கழுவி தனியாக காயவைத்து உபயோகிக்க வேண்டும். இல்லை எனில் தண்ணீர் படும் இடங்களில் பாசி பிடிக்க ஆரம்பித்துவிடும்.