
பீர்க்கங்காய் கடையல்:
பீர்க்கங்காய் 2
சின்ன வெங்காயம் 50 கிராம்
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
புளி சிறிய எலுமிச்சையளவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1ஸ்பூன்
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் 2 ஸ்பூன் பீர்க்கங்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் நிறம் மாறியதும் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.
தண்ணீர் எதுவும் விடத் தேவையில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து 1 கப் நீர்க்க கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சுருண்டு வரும் சமயம் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கிளறி இறக்க மிகவும் ருசியான பீர்க்கங்காய் கடையல் தயார்.
இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கல் என தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
சேனைப் பொரியல்:
சேனைக்கிழங்கு கால் கிலோ
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மசாலா அரைக்க:
தேங்காய் துருவல் ஒரு கப்
மிளகாய் வற்றல் 2
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் 1 சேனைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கவும். வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க ஆரம்பித்ததும் நறுக்கிய சேனைத் துண்டுகளை சேர்த்து தட்டைப் போட்டு மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
குழைந்து விடாமல் அதே சமயம் நன்கு வெந்ததும் எடுத்து நீரை வடித்து விட்டு தட்டில் ஆறவிடவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய், கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு கடுகு பொரிந்ததும் வெந்த சேனைக்கிழங்கை சேர்த்து நாலு பிரட்டு பிரட்டவும். பிறகு கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கிளறி இறக்க மிகவும் ருசியான சேனைப்பொரியல் தயார்.